என்ஐஏ சோதனையை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம்: முபாரக் எச்சரிக்கை

தேசிய புலனாய்வு முகமை பயன்படுத்தி பாஜக அரசு மிரட்டி வருகிறது. இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என முபாரக் தெரிவித்தார்.
என்ஐஏ சோதனையை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம்: முபாரக் எச்சரிக்கை

திருநெல்வேலி: தஞ்சாவூரில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக அந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத எஸ்டிபிஐ  கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த சோதனையை நடத்தி வருகிறது. இதனை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார். 

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 4 மணி நேரமாக சோதனை நடத்தினர். 

சோதனைக்கு பின்னர் முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது, எனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்பட்டது. இன்றைக்கு மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தியாவில் தேசிய புலனாய்வு பிரிவை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிற பாஜக, ஏவல் துறையான என்ஐஏ மூலமாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நம்புகிறது. 

தஞ்சாவூரில் நடைபெற்ற திருப்புவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்த வழக்கில் இன்றைக்கு ஒரு உள்நோக்கத்தோடு காழ்ப்புணர்ச்சியோடு இந்த சோதனை நடந்துள்ளது. அந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று அன்றிலிருந்து இன்று வரை நாங்களும் போராடி வருகிறோம். 

சோதனையின் போது எனது வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில், ஏமாற்றத்தோடு வெறுங்கையோடு திரும்பிச் சென்றவர்கள் என்னுடைய செல்போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார்கள்.  

இதனை எஸ்டிபிஐ சட்டபூர்வமாக எதிர்கொள்ளும். இதுபோன்ற பொய் வழக்குகளுக்கோ, பொய்யான சோதனைகளுக்கோ கட்சியினுடைய பெயரை களங்கம் விளைவிக்க நினைத்தால் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம். 

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒருபோது நாங்கள் அச்சமடைய மாட்டோம். மக்களுக்காக எங்களது போராட்டம் எப்பொழுது தொடர்ந்து நடக்கும். என்ஐஏ முகத்திரை என்ன என்பதை மக்கள் மன்றத்தில் தெரிவிப்போம். என்ஐஏ சோதனையை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம்.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வருவதையொட்டி, தேசிய புலனாய்வு முகமை பயன்படுத்தி பாஜக அரசு மிரட்டி வருகிறது. இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என முபாரக் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com