களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

திருச்சியில் வரும் 26 ஆம் தேதி வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்



சென்னை: திருச்சியில் வரும் 26 ஆம் தேதி வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைத்து ஜனநாயகத்தை வேரறுக்கும் சூழ்நிலை நிலவிவரும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு ஜனநாயகத்தை மீட்பதில் கழகம் முனைப்போடு களம் காண்கிறது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கழகப் பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறைவடைந்து, பூத் கமிட்டிகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முறையாக அமைக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் கழக உடன்பிறப்புகள் முனைப்புடன் செயலாற்றி நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள்.

மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில் - ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் மண்டலமாகச் சென்று சந்திப்பது பயன் தரும் என்பதால் முதற்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சி - கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் நாள் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. 

இப்பயிற்சி முகாமில் அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் விவரங்களும் நேரடியாக சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் தயாராக உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே, எதற்காக இப்போதே இந்தக் கூட்டம் என்று உடன்பிறப்புகளில் சிலர் நினைக்கலாம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் தேர்தல் நாளன்று வாக்குகளைப் பெறுவதோடு முடிவடைந்து விடுவதில்லை. அரசுக்கும், கழகத்திற்கும், வாக்காளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் பெரும் பொறுப்பு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடமே உள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் போன்ற முக்கியமான பணிகளும் உள்ளன. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, இறந்துவிட்ட வாக்காளர்கள், தேர்தல் நாளன்று திடீரென ‘உயிர்த்தெழுந்து’ வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானதாகும்.

முந்தைய பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில், கழக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்களை அதிகளவில் சேர்த்துள்ளதை அறிவோம். களைகளை நீக்கி, பயிரினை வளர்க்கும் டெல்டா பகுதிக்காரர்கள் வாக்காளர் பட்டியலிலும் அந்தக் கடமையை நிறைவேற்றி, வெற்றியைச் சாகுபடி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்யும் பொறுப்பும் கடமையும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையே சேரும். தேர்தலின் மாபெரும் வெற்றிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பங்கு அளப்பரியது. கழகத்தின் வெற்றிக்கு நீங்கள்தான் அடிப்படை. எனவேதான் உங்களை இன்னும் கூர்மைப் படுத்தும் வகையில் இந்த மாபெரும் பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு இணைந்து செயலாற்றும் கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.

சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில் நாடு போற்றும் நல்லாட்சி நடத்தி வரும் கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் வகையிலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளை, வெட்டி ஒட்டி கழக ஆட்சியில் நடைபெற்றது போல பரப்பிடுவோரின் சதிச்செயல்கள் தேர்தல் நெருங்கவுள்ள சூழலில் இன்னும் தீவிரமாக நடந்தேறும். அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையிலும், கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் சமூக வலைத்தளங்களில் முறையாக இயங்கிடும் வண்ணம் தயாராகும் விதமாக சமூக ஊடகங்கள் குறித்தான பயிற்சிகள் இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளன.

இனி வருங்காலங்களில் கழக ஆட்சிக்கும் மக்களுக்குமான இணைப்பு பாலமாக நீங்கள் செயல்படப் போகிறீர்கள். கழக ஆட்சியின் சாதனைகளையும், திராவிட மாடல் அரசின் மக்கள்நலத் திட்டங்களையும் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது.  அதற்காகத்தான் இப்பயிற்சிக் கூட்டம்.

இப்பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதோடு உடன்பிறப்புகளாகிய உங்களின் பணிகள் முடிவடைந்து விடுவதில்லை. உங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள் தோறும் திண்ணைகள் தோறும் பிரசாரம் - கழகத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்; முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் நிறைவேற்றப்படும் அளப்பரிய சாதனைகளையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் தொடர்ந்து எடுத்துரைத்திட இந்தப் பயிற்சிப் பாசறை உங்களுக்கு வழிகாட்டும். கருணாநிதியின் மெய்நிகர் உடன்பிறப்புகளாகிய நீங்கள் இக்கூட்டத்தில் பெற்ற பயிற்சியைக் கொண்டு கழகத்தின் வெற்றிக்குக் கண்துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டும் எனக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் அன்புக் கட்டளையிடுகிறேன்.

மக்கள் நலன் காக்கும் கழக ஆட்சியின் வெற்றியை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உறுதி செய்யவிருக்கின்ற கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை, தங்கள் கழக மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து திரும்ப அவர்கள் இல்லம் சென்று பத்திரமாகச் சேரும் வரையில் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு கடமையாற்றிட மாவட்டக் கழகச் செயலாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான கழக உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர். ‘இந்தியா’வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். எத்தகைய சவால்களையும் வென்று சாதனைப் படைத்திடும் ஆற்றல் கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com