தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும்:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முகாமை தொடங்கியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 
தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும்:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



தருமபுரி: தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முகாமை தொடங்கியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

சட்டப்பேரவைத் தோ்தலின்போது மகளிா் உரிமைத் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என்று திமுகவின் தோ்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ பெயா் வைக்கப்பட்டு, செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்தத் திட்டத்துக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 20-இல் தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை ஏற்கனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், விண்ணப்பங்களைக் கொடுத்து பதிவு செய்துகொள்வதற்கு தமிழகம் முழுவதும் 36,000 இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 24) சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிா் உரிமைத் தொகை முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை காலை சேலம் மாவட்டம் ஓமலூா் கமலாபுரத்துக்கு வந்த முதல்வா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக தொப்பூா் வந்தடைந்த முதல்வர், தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமை தொடங்கி வைத்தார். குடும்பத் தலைவிகளிடமிருந்து மகளிர் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் பணியை முதல்வர் பார்வையிட்டு விண்ணப்பதாரர்களிடம் கலந்துரையாடினார்.

இதையடுத்து காலை 9.45 மணிக்கு மகளிர் குழுவினரிடம் கலந்துரையாடிய பின்பு காலை 10 மணிக்கு பெண்களுக்கான மருத்துவ முகாமை பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தொப்பூரில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையை வந்தடைந்து முதல்வர் உரையாற்றினார். 

அப்போது, கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கான கட்டணமில்லை பேருந்து சேவை திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் நாள்தோறும் 36 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். 

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உழைக்கிறோம். 

மகளிர் தன்னம்பிக்கையோடும் சுயமரியாதையோடும் வாழ கொண்டு வரப்பட்ட திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். 

34 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுக்களை கருணாநிதி தருமபுரியில் தொடங்கி வைத்தார். தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முகாமை தொடங்கியுள்ளோம்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கப்போகிறது. இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழக்கூடிய திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com