திருச்சி: தமிழக அரசின் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில் நடைபெறும் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர், 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
வேளாண் உழவர் நலத்துறை சார்பில் 'வேளாண் சங்கமம் 2023' என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
மாநில அளவிலான இந்தக் கண்காட்சியில் 250 உள்அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 17 மாநில அரசுத்துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும் 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம், பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல் விளக்கத் திடல்கள், பசுமைக்குடில்கள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
விவசாயிகளுக்குப் பயன்படும் புதிய தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை வேளாண் விளை பொருட்கள், இயற்கை பருத்தி ஆடை, மூலிகைச்சாறு, பானங்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், எ.வ. வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, ஆட்சியர் மா. பிரதீப் குமார் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.