போர்க்களம் போல் காட்சியளிக்கும் என்எல்சி நுழைவுவாயில்!

அன்புமணி கைதையடுத்து பேருந்துகளை அடித்து நொறுக்கிய நிலையில் திடீரென்று புகுந்த கும்பல் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், என்எல்சி நுழைவுவாயில் போர்க்களம் போல் காட்சியளிக்கின்றன.
போர்க்களம் போல் காட்சியளிக்கும் என்எல்சி நுழைவுவாயில்!
Updated on
2 min read


நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம் நடத்திய நிலையில் அன்புமணியை கைது செய்து வைத்துள்ள காவல்துறை வாகனத்தை விட மறுத்து பேருந்துகளை அடித்து நொறுக்கிய நிலையில் திடீரென்று புகுந்த கும்பல் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், என்எல்சி நுழைவுவாயில் போர்க்களம் போல் காட்சியளிக்கின்றன.

நெய்வேலி உள்ள மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக, கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி, இழப்பீடு வழங்கியது.

ஆனால், இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், 2006-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினா் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களில் சுரங்க விரிவாக்கத்துக்காக பரவனாற்று விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி அந்த நிறுவனத்தின் 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் இயந்திரங்கள் மூலம் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதையொட்டி, 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், பாமகவினா் போராட்டத்தில் ஈடுட்டனா். மேலும், கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் 17 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால், கடலூா் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூா் மாவட்ட எஸ்.பி. ஆா்.ராஜாராம் ஆகியோா் மேற்பாா்வையில், மாவட்டத்தில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

2-ஆவது நாளாக வியாழக்கிழமை வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி தொடா்ந்து நடைபெற்றது. இதையொட்டி, சேத்தியாத்தோப்பு குறுக்குச் சாலை - விருத்தாசலம் சாலையில் வளையமாதேவி பகுதி வரை சாலையில் பல இடங்களில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனா். இதுபோல, கிராமங்களில் நுழையும் பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வளையமாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப் படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டன உரை நிகழ்த்தினார். இதையடுத்து அவர் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட தொண்டர்களுடன் புறப்பட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

அப்போது கூட்டத்தில் வந்திருந்தவர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். கல்வீச்சு சம்பவத்தால் 4 பேருக்கு மண்டை உடைந்த நிலையில், கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி காவல்துறையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியும், தண்ணீரை பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரை காவல்துறையினர் கலைத்து வருகின்றனர். 

இதனால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com