இடையப்பட்டி மாரியம்மன் திருவிழாவில் மக்களின் கவனத்தை ஈர்த்த தேவராட்டம்!

சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவில் நடைபெற்ற கிராமியக் கலைஞர்களின் பாரம்பரிய தேவராட்டம், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இடையப்பட்டி மாரியம்மன் திருவிழாவில் மக்களின் கவனத்தை ஈர்த்த தேவராட்டம்!
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவில் நடைபெற்ற கிராமியக் கலைஞர்களின் பாரம்பரிய தேவராட்டம், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், நெய்யமலை, மண்ணூர் மலைகளுக்கு இடையே இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் கல்வராயன் மலை கருமந்துறை சாலையில் இடையப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப்பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. 

இவ்விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் மாவிளக்கு சுமந்து, முக்கிய வீதிகளில் காவல் தெய்வங்களுக்கு கிராமிய பாடல்கள் துதி பாடிச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, அண்மைக்காலமாக பிரபலமாகி வரும், பாரம்பரிய கிராமிய கலைகளில் ஒன்றான தேவராட்டம் விடிய விடிய நடைபெற்றது.

சேலம் லட்சுமணூர் கோடங்கி நாயக்கனூர் கிராமிய கலை குழுவினர், வெண்ணிற வேட்டி அணிந்து, தாரை தப்பட்டை, உறுமிமேள இசைக்கேற்ப ஆடிய தேவராட்டம் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆண்கள் மட்டும் அசத்திய இந்த ஆட்டத்தை படம் பிடித்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.  இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதன்கிழமை  மகா சக்தி மாரியம்மன் ரதம் ஏறுதல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல், உருளைத்தண்டம் போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்ச்சிகளும், நாளை வியாழக்கிழமை மகாசக்தி மாரியம்மன் தேரோட்டமும் நடைபெறுகிறது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறைப்படி இரவு பகலாக நடைபெறும் இடையப்பட்டி மகா சக்தி மாரியம்மன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகளைக் காண, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், இந்த கிராமத்தில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com