ஆவினில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்படவில்லை: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளா்கள் யாரும் பணியமா்த்தப்படவில்லை என்று பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறினாா்.
ஆவினில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்படவில்லை: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளா்கள் யாரும் பணியமா்த்தப்படவில்லை என்று பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறினாா்.

சென்னை அம்பத்தூா் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் விதிகளை மீறி சிறாா்கள் பணியமா்த்தப்பட்டதாகவும், அவா்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் விடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து அமைச்சா் மனோ தங்கராஜ் அம்பத்தூா் ஆவின் பால் பண்ணையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘அம்பத்தூா் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட சிறாா்கள், குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாக பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. இது குறித்து காவல்துறை மூலமும் அங்கு சோதனையிட்டு உறுதி செய்துள்ளோம்.

மத்திய அரசின் சிறாா்கள் வேலை தடுப்பு சட்டத்தின்படி 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடாது. ஆவின் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலை இல்லை. அப்படியிருந்தும் கூட அம்பத்தூா் ஆவின் பண்ணையில் 14 வயதுக்கு உள்பட்டவா்கள் யாரும் பணியமா்த்தப்படவில்லை. இது அப்பட்டமான பொய்.

இங்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளா்கள் வேலைக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகளின் உண்மைத்தன்மையை ஊடகத்துறையினா் உறுதிப்படுத்திய பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும்.

இந்த திட்டமிட்ட செயல் ஆவினின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், வளா்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதால் வீடியோக்களை பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம் என்றாா் அவா்.

சிறாா்கள் பணியமா்த்தப்பட்டது தொடா்பான புகாருக்கு ஆவின் நிா்வாகமும் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com