ஆவின் பால் திருட்டு விவகாரம்: இரு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து

ஆவின் பால் திருட்டு விவகாரத்தின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் திருட்டு விவகாரம்: இரு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து

வேலூர்: ஒரே பதிவெண்ணில் இரு வேன்களை இயக்கி வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 2,500 லிட்டர் அளவுக்கு பால் திருடப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இருவர் மீது சத்துவாச்சாரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட இரு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1 ஆம் தேதி முதல் சில நாள்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கு இடையே நாள்தோறும் சுமார் 2,500 லிட்டர் அளவுக்கு வித்தியாசம் இருப்பதை அறிந்த அதிகாரிகள், இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் வேலூர் ஆவின் பால்பண்ணைக்கு பால் பாக்கெட்டுகள் ஏற்றிச்செல்ல வந்த வேன்களில் இரு வேன்கள் ஒரே பதிவெண்ணில் (டிஎன்23 ஏசி1352) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பல ஆயிரம் மதிப்புள்ள பால் பாக்கெட்டை ஏற்றிக் கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்த அந்த இரு வேன்களுடன் பால் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட இரு வேன்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், டிஎன்23 ஏசி1352 என்ற எண் கொண்ட வேன் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், பாறை வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு சொந்துமானது என்பது தெரியவந்தது. 

அதேசமயம், போலியாக அதே பதிவு எண் பலகையை வைத்து இயக்கப்பட்ட மற்றொரு வேன் சத்துவாச்சாரி, ரங்காபுரம், புதுத்தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவக்குமார்(24) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆவின் பால் பண்ணை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிவக்குமார், அவரது ஓட்டுநர் விக்கி ஆகிய இருவரும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வேன்களில் போலி பதிவெண் கொண்ட வேனை ஓட்டிச்சென்றதுடன், தடுக்க முயன்ற ஆவின் உதவி பொதுமேலாளர் (விற்பனை) சிவக்குமார் என்பவருக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தததாக தெரிகிறது.

இதுதொடர்பாக, ஆவின் உதவி பொதுமேலாளர் (விற்பனை) அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார், போலி பதிவெண் கொண்ட வாகனத்தின் உரிமையாளர் சிவக்குமார், அதன் ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக புகாருக்குள்ளான தினேஷ்குமார், சிவக்குமார் ஆகியோருடன் ஏற்படுத்தப்பட்டிருந்த பால் வினியோக ஒப்பந்தத்தை ஆவின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும், ஒரே பதிவெண்ணில் இடம்பெற்ற இரு வேன்களை ஆவின் வளாகத்துக்குள் அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார்‌ காவல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com