மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) காலை மலர்களை தூவி காவிரியில் தண்ணீா் திறந்து வைத்தார் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!


மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) காலை மலர்களை தூவி காவிரியில் தண்ணீா் திறந்து வைத்தார் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர்  திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். 

ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் அணை  2024 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி மூடப்படும். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார்  16.50  லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும். பாசன பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பாசனத் தேவை குறையும்.

மேட்டூர் அணையின் வலது கரையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா  பாசனத்திற்காக  தண்ணீரை திறந்து விட்டார். காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், அரசு கூடுதல் தலைமை செயலாளா் சந்தீப் சக்சேனா, நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் முத்தையா, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, சேலம் ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஆர். ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.  முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அளவு  படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து, திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூன்றரை நாள்களில் 200 கிலோமீட்டர் தூரம் பயணித்து கல்லணையை சென்றடையும்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 90 ஆவது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மட்டுமன்றி, காவிரிக் கரையோரப்பகுதிகளைச் சேர்ந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதன் மூலம் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

முதல்வா் வருகையை ஒட்டி, பாதுகாப்புப் பணியில் நூற்றுக் கணக்கான போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com