முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: ஜூன் 16 - இல் தீர்ப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கின் தீர்ப்பு வரும் ஜூன் 16 -ஆம் தேதி வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கின் தீர்ப்பு வரும் ஜூன் 16 -ஆம் தேதி வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு  டிஜிபி (சட்டம் ஒழுங்கு) மீதும், புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.மீதும் விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் 2021-ஆம் ஆண்டில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2021, ஜூலை மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், முன்னாள் எஸ்.பி.மீதும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.

சுமார் 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் தலைமைச் செயலர், முன்னாள் உள்துறைச் செயலர், சீருடைப் பணியாளர், தேர்வாணைய ஏடிஜிபி என 68 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் எதிர் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சாட்சியங்கள் அளித்த தகவலின்படி முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு இருவரும் பதிலளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அரசு மற்றும்  எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்ற நீதிபதி எம்.புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திங்கள்கிழமை நடை பெற்ற  வழக்கு விசாரணையின் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆஜராகவில்லை. தொடர்ந்து அரசுத்தரப்பு வழக்குரைஞர் வைத்தியநாதன் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். 

அவரைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞர் ரவீந்ததிரனும், முன்னாள் எஸ்.பி. தரப்பு வழக்குரைஞர் ஹேமச்சந்திரன் ஆகியோர் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தனர்.

வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதி எம். புஷ்பராணி, ஜூ ன் 16 - ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும்,  முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com