கூலியை குறைத்து வழங்கிய ஊராட்சி நிர்வாகம்: கண்ணீர் விடும் தூய்மை காவலர்கள்

அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சியில் தினக் கூலியை குறைத்து வழங்கியதால், 15-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.
கூலியை குறைத்து வழங்கிய ஊராட்சி நிர்வாகம்: கண்ணீர் விடும் தூய்மை காவலர்கள்

அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சியில் தினக் கூலியை குறைத்து வழங்கியதால், 15-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெக்கலூர் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் நாள்தோறும் சேகாரமாகும் குப்பைகளை, ஊராட்சி மன்றத்தில் பணியாற்றும் 18 தூய்மை காவலர்கள் வீடு வீடாகச் சென்று, மக்கும், மக்காதக் குப்பைகளை பிரித்து திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த தூய்மை காவலர்களுக்கு வழங்கும் தினக் கூலியை ஊராட்சி நிர்வாகம் குறைத்து வழங்கியது மட்டுமின்றி, மரியாதைக் குறைவாக நடத்துவதாகக் கூறி தூய்மை காவலர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். 

மேலும் இது குறித்து விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், சமூக ஆர்வலர்களை, வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தெக்கலூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் கூறியதாவது: 

ஒரு நாளைக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக தெக்கலூர் ஊராட்சியில் வழங்கி வந்தனர். இதிலும் தற்போது, மாத ஊதியத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை குறைத்து வழங்கியுள்ளனர். மேலும், 15 நாள்கள் பணியாற்றிய ஒரு தூய்மை காவலருக்கு எவ்வித கூலியும் வழங்கவில்லை. ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. ஆகவே உரிய கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

இது குறித்து அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் கேட்ட போது, தூய்மை காவலர்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. தெக்கலூர் ஊராட்சியில் பணியாற்றி தூய்மை காவலர்களில் விடுப்பு எடுத்தவர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றேன். மேலும் இத்தூய்மை காவலர்களுக்கு இந்த மாதம் முதல் ஊதியத்தை அதிகப்படுத்தி மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. ஆகவே விரைவில், உரிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com