ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.
ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை
Published on
Updated on
2 min read

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சரான வி.செந்தில் பாலாஜி, கரூா் மாவட்ட திமுக செயலராகவும் இருந்து வருகிறாா். இவா் கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் புதிதாக ஒரு வழக்கைப் பதிந்து, விசாரணை செய்தது. மத்தியக் குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும், அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கோரியும் செந்தில் பாலாஜி, உயா்நீதிமன்றத்தில் முறையிட்டதால், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் அனுமதி: இது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மத்திய குற்றப்பிரிவு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியும் அண்மையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த நிலையில், கடந்த மே 26 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை வருமான வரித் துறை அதிகாரிகள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.

செந்தில் பாலாஜி வீடு: இதற்கிடையே, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் வந்தபோது, செந்தில் பாலாஜி நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்தாா்.

துணை ராணுவப்படை, அதிவிரைவுப்படை: இதனால், செந்தில் பாலாஜி வந்த பின்னா், அமலாக்கத் துறையினா் அவரது வீட்டில் சோதனை செய்தனா். இந்த சோதனையையொட்டி, அங்கு துப்பாக்கிகளுடன் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டனா். அதேபோல, சென்னை போலீஸாரும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டனா்.

சோதனை குறித்து அறிந்து செந்தில் பாலாஜி வீட்டின் முன் அவரது ஆதரவாளா்களும், திமுகவினரும் திரண்டனா். இதன் விளைவாக, நண்பகல் செந்தில் பாலாஜி வீட்டுக்கு மத்திய அதி விரைவுப்படையினா் வரவழைக்கப்பட்டனா். ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீட்டிலும் அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா். மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் நண்பகலுக்கு பின்னா் சோதனை செய்தனா்.

11 இடங்களில் சோதனை: இதேபோல, கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீடு, ராமேசுவரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோா் வசிக்கும் வீடு, செந்தில் பாலாஜியின் உதவியாளா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் வீடு, வெங்கமேட்டில் உள்ள அமைச்சரின் நண்பா் சண்முகம் செட்டியாா் வீடு, லாலாப்பேட்டையில் உள்ள ஆடிட்டா் திருநாவுக்கரசு வீடு, ராயனூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் உறவினா் கொங்கு மெஸ் மணி வீடு, கரூா் செங்குந்தபுரத்தில் உள்ள ஆடிட்டா் சதீஸ்குமாா் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

ஈரோடு திண்டல் அருகே சக்தி நகா் மூன்றாவது வீதியை சோ்ந்த டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரா் சச்சிதானந்தம் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். கடந்தமுறை சோதனைக்கு வந்த அதிகாரிகள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அனைத்து இடங்களிலும் துணை ராணுவப்படையினா் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டிருந்தனா்.

மொத்தமாக சென்னையில் 4, கரூரில் 6, ஈரோடு ஒரு இடம் என மொத்தம் 11 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. காலை தொடங்கிய சோதனை, இரவு நிறைவு பெற்றது. 

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி: 17 மணிநேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக நள்ளிரவு 2 மணியளவில் செந்தில் பாலாஜி அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது காரில் செல்கையில் வழியிலேயே நெஞ்சுவலிப்பதாக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவர் வேதனையை வெளிப்படுத்தினார். உடனே அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். காலையில் நடைபயிற்சி சென்ற உடையுடனேயே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதனிடையே செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா? கைது செய்யப்பட்டாரா? எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை: இதனிடையே செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, உதயநிதி வருகை தந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com