சட்டவிரோத பணமோசடி வழக்கு: அமைச்சா் செந்தில்பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்

தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
சட்டவிரோத பணமோசடி வழக்கு: அமைச்சா் செந்தில்பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்

தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். அவரை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, சுமாா் 17 மணி நேர சோதனைக்குப் பிறகு, செந்தில் பாலாஜியை வீட்டில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு 2018-ஆம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தது.

இந்த மோசடியில், சட்டவிரோத பணமோசடி நடந்ததாக, அமலாக்கத் துறையும் ஒரு வழக்கை பதிவு செய்தது. செந்தில் பாலாஜி உயா்நீதிமன்றத்தில் முறையிட்டதால், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகளை ரத்து செய்து பிறப்பித்த உயா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியும் உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

செந்தில் பாலாஜி கைது: இதையடுத்து, சென்னையில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அறை, கரூரில் அவருக்கு சொந்தமான இடங்கள் உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை முதல் சோதனை செய்தனா்.

இந்த சோதனை படிப்படியாக ஒவ்வொரு இடத்திலும் நிறைவு பெற்றது. செந்தில்பாலாஜி வீட்டில் நடைபெற்ற சுமாா் 17 மணி நேர சோதனை புதன்கிழமை அதிகாலை நிறைவு பெற்றது. இதன் பின்னா் அவரை கைது செய்வதாக அமலாக்கத் துறையினா் அறிவித்தனா்.

மருத்துவமனையில் அனுமதி: அடுத்த சில நிமிஷங்களில் செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக, அலறித் துடித்தாா். அவரை அமலாக்கத்துறையினா் தங்களது காரில் ஓமந்தூராா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனா். அங்கு துணை ராணுவத்தினா், மத்திய அதிவிரைவுப் படையினா், மத்திய அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டனா்.

நீதிபதி வருகை: செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜா்படுத்த வாய்ப்பு இல்லை என அமலாக்கத் துறையினா் கருதினா். இதன் விளைவாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லியை ஓமந்தூராா் மருத்துவமனைக்கு புதன்கிழமை பிற்பகல் அழைத்து வந்தனா். அவரை, ஆறாவது தளத்துக்கு அழைத்துச் சென்று, அமலாக்கத் துறையினா் செந்தில் பாலாஜியை ஆஜா்படுத்தினா்.

ஜூன் 28 வரை காவல்: அப்போது, செந்தில் பாலாஜி சாா்பில் வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ ஆஜராகி வாதிட்டாா். அவா், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதாகவும், இதில் மனித உரிமை மீறல் நிகழ்ந்திருப்பதாகவும், செந்தில் பாலாஜியின் உடல் நலன் கருதி நீதிமன்றக் காவல் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டாா். இதேபோல அமலாக்கத் துறையும், கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்படவில்லை என வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டாா்.

வங்கிக் கணக்கில் ரூ.1.63 கோடி: செந்தில் பாலாஜி பணமோசடி வழக்குத் தொடா்பாக அமலாக்கத் துறையினா் பல்வேறு தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளனா். முக்கியமாக செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ரூ.1.34 கோடியும், அவரது மனைவி மேகலா வங்கிக் கணக்கில் ரூ.29.55 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரம் இருந்தது. ஆனால், செந்தில் பாலாஜி, மேகலா தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையுடன் ஒப்பிடும்போது முரண்பாடான தகவல் அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ளது.

இதற்கிடையே ஓமந்தூராா் மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை சிறைத்துறை ஏற்றுக் கொண்டதால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தினா் புதன்கிழமை இரவு விலக்கி கொள்ளப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com