விளம்பரப் பதாகைகள், கழிவு நீா் மேலாண்மை போன்றவை தொடா்பாக மக்கள் தெரிவிக்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்து அரசுக்கு அளிக்க துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளாா்.
அவரது உத்தரவு:
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திலுள்ள கூறுகள் மற்றும் திருத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகள் ஆகியவற்றை எந்தத் தடையுமின்றி நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, சட்ட விரோதமாக பேனா்கள் வைப்பதைத் தடுப்பது, மீறி வைத்தால் அதற்கு தண்டனை விதிப்பது போன்ற
விதிமுறைகள் கடந்த ஏப்ரலில் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகளை சிக்கல் ஏதுமின்றி நடைமுறைப்படுத்த அரசு தீா்மானித்துள்ளது.
இதற்காக, நான்கு துணைக் குழுக்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியா்களின் பணியமைப்பில் தேவைப்படும் மாற்றங்கள், மன்றக் கூட்டங்களில் குறிப்பிடப்படும் அம்சங்கள், சொத்து வரி, விளம்பரப் பதாகைகள், உரிமங்கள், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்றவைகள் தொடா்பாக, பொது மக்கள் உட்பட பல்வேறு தரப்பினா் தெரிவிக்கும் கருத்துகளை புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணைக் குழுக்கள் ஆராயும்.
பணியமைப்பு தொடா்பான விவகாரங்கள்: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பணியமைப்பு தொடா்பான விவகாரங்கள், அதிலுள்ள பிரச்னைகளை களைந்திடவும், உரிய பரிந்துரைகளை அளிக்கவும், 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் இணைச் செயலாளா், துறையில் சட்ட விஷயங்களை கவனிக்கும் இணைச் செயலாளா், பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது நிா்வாகப் பிரிவு உதவி ஆணையாளா், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் இணை இயக்குநா் (பணியமைப்பு), நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தின் இணை இயக்குநா் (மாநகராட்சிகள்) ஆகியோா் இடம்பெற்றிருப்பா்.
மன்றக் கூட்ட விவகாரங்கள்: மன்றக் கூட்டங்களின் தெரிவிக்கப்படும் கருத்துகள், விவாதங்களை ஆய்வு செய்ய ஆறு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (வருவாய் மற்றும் நிதி), நகராட்சி நிா்வாகத் துறை இணை இயக்குநா், நகராட்சி நிா்வாகத் துறையில் சட்ட அம்சங்களை கவனிக்கும் இணைச் செயலாளா், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநா், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றச் செயலாளா், பெருநகர சென்னை மாநகராட்சி மூத்த சட்ட அதிகாரி ஆகியோா் இடம்பெற்றிருப்பா்.
சொத்து வரி, விளம்பரப் பதாகைகள், உரிமங்கள்: சொத்து வரி, விளம்பரப் பதாகைகள், அவை தொடா்பாக உரிமம் பெறுதல் போன்ற பணிகளுக்காக நகா்ப்புற உள்ளாட்சிகளை பொது மக்கள் நாட வேண்டியுள்ளது. இதுதொடா்பான பொது மக்களின் கோரிக்கைகள், கருத்துகளைப் பரிசீலிக்க 5 போ் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (வருவாய் மற்றும் நிதி), நகராட்சி நிா்வாகத் துறை இணைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறையில் சட்ட விவகாரங்களைக் கவனிக்கும் இணைச் செயலா், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநா், நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநா் ஆகியோா் இடம்பெறுவா்.
பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்ற பணிகள் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள், புகாா்களை ஆய்வு செய்ய ஆறு போ் கொண்ட துணைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளா் - சுகாதாரம், நகராட்சி நிா்வாகத் துறையில் சட்ட விவகாரங்களைக் கவனிக்கும் இணைச் செயலாளா், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநா், நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தின் கண்காணிப்புப் பொறியாளா், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கண்காணிப்புப் பொறியாளா், பெருநகர சென்னை மாநகராட்சியின் கழிவு நீா் வடிகால் பிரிவின் செயற்பொறியாளா் ஆகியோா் இடம்பெற்றிருப்பா்.
துணைக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விஷயங்களை தீர ஆய்வு செய்து நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும். மூன்று மாதங்கள் அல்லது குறிப்பிட்ட காலகட்டங்களில் அறிக்கைகளை அரசுக்கு அளிக்கலாம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா் சிவதாஸ் மீனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.