முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லை: விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால் முதல்போக நன்செய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்று கவலையடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்)
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்)


கம்பம்: தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால் முதல்போக நன்செய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்று கவலையடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்போக சாகுபடிக்கு ஜூன் 1 ஆம் நாள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று தண்ணீரை திறந்துவிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி 120 நாட்களுக்கு, பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீர் தேவைக்காக 100 கன அடியும் திறக்கப்படுகிறது என்றார். 

குறைந்த தண்ணீர்
ஆனால், அமைச்சர் கூறியபடி 300 கன அடி தண்ணீர் திறக்கவில்லை, 150 முதல் 200 கன அடி தண்ணீர் மட்டுமே ஜூன் 13 வரை வந்தது. இந்த தண்ணீர் மூலம் முதல் போக சாகுபடி வேலைகள் நடைபெறவில்லை. 

இந்த நிலையில் ஜூன் 14 - இல் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அணைக்குள் தண்ணீர் வருவது குறைந்தது. காரணம் நீர் பிடிப்புப் பகுதிகளான பெரியாறு மற்றும் தேக்கடி ஏரி பகுதிகளில் மழை குறைந்த அளவே பெய்தது.

நிரம்பிய அணை 
பொதுவாக முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து என்பது தென்மேற்கு பருவ மழை தான். மே மாத கடைசி வாரம் அல்லது ஜூன் மாதம் முதல் பெய்யத்தொடங்கும் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சில நேரங்களில் அதிகப்படியான மழையால் அணை நிரம்பும் நிலை ஏற்படும். கடந்த சில ஆண்டுகளில் 5-க்கும் மேலாக அணை முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. அப்போது கேரளாவுக்கு உபரி நீர் திறக்கும் நிலையும் ஏற்பட்டது. 

இந்த நிலையில் இந்தாண்டு ஜூன் மாதம் 15 நாட்களாகியும் அணை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யாதலால் அணைக்குள் தண்ணீர் வரத்து ஏற்படவிலை. இருக்கிற தண்ணீரை 300 கன அடி வீதம் வெளியேற்றுவதால் நீர் மட்டமும் குறைந்து வருகிறது.

நீர் வரத்து இல்லை
ஜூன் 13 - இல் அணையின் நீர்மட்டம் 117.65 அடி உயரமாக இருந்தது. அணையின் நீர்பிடிப்புப் பகுதியான பெரியாற்றில் 2.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 1.4 மி.மீ., மழையும் பெய்தது. ஆனால் அணைக்குள்  நீர் வரத்து இல்லை. 

அதே நேரத்தில் ஜூன் 14 -  புதன்கிழமை அணையின் நீர்மட்டம் 117.55 அடி உயரமாக இருந்தது, நீர் வரத்து 96.81 கன அடியாக இருந்தது. ஆனால் பெரியாற்றில் 0.8 மி.மீ., மழையும், தேக்கடி ஏரியில் 0.8 மி.மீ., மழையும் பெய்தது.  வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.40 அடி உயரமாக இருந்தது. பெரியாற்றில் 0.8 மி.மீ., மழையும், தேக்கடியில் 0.8 மி.மீ., மழையும் பெய்தது. நீர் வரத்து இல்லை.

கடந்த 3 நாள்களில் 2 நாள்கள் அணைக்கு நீர் வரத்து இல்லை, ஆனாலும் தண்ணீர் வெளியேற்றம் 300 கன அடியாக இருந்தது. இதனால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடந்த சில பருவங்களில் முதல் போக சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை, காரணம் தென்மேற்கு மழை குறைந்ததால். ஆனால் கடந்த ஆண்டு நன்றாக இருந்தது. இந்தாண்டு தண்ணீர் திறந்து 15 நாள்களாகியும் அணையில் மழை பெய்யாதது கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் கவலையை தீர்ப்பவர் வருண பகவான் மட்டுமே. 

அணை நிலவரம்
வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.40 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 2,159 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து இல்லை மற்றும் வெளியேற்றம் விநாடிக்கு 300 கன அடியாக இருந்தது. பெரியாற்றில் 1.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 1.0 மி.மீ., மழையும் பெய்தது.

மின் உற்பத்தி
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் 300 கன அடி தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் ஒரு மின்னாக்கியில் 23 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com