சென்னை: தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இதயத்தின் ரத்த நாளங்களில் மூன்று அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஓமந்தூரார் மருத்துர்கள் பை-பாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
இதற்கிடையே, சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து புழல் சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டார்.
இதையும் படிக்க | பாலியல் புகார்: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை!
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரின் மனைவி கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று இரவே காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
“மூத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூன்று நாள்களில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.