பல்லடத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பணிகள் பாதிப்பு

பல்லடம் நகராட்சியில் துய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் துப்புரவுப் பணிகள் வெள்ளிக்கிழமை பாதிப்படைந்துள்ளது.
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் .
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் .



பல்லடம்: பல்லடம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் துப்புரவுப் பணிகள் வெள்ளிக்கிழமை பாதிப்படைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக 6 பெண்கள் உள்பட 30 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் தற்காலிக பணியாளர்களாக 45 ஆண்களும், 135 பெண்களும் ஆக மொத்தம் 180 பேர்  பணியாற்றி வருகின்றனர். 

திருப்பூர் மாநகரத்தையொட்டி புறநகர் பகுதியாக பல்லடம் சுற்று வட்டாரம் விளங்கி வருவதால் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போதுள்ள தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில்  துரை அண்ட் கோ அரியலூர் என்ற பழைய ஒப்பந்ததாரின் தூய்மைப் பணி ஒப்பந்தம் நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்தது. இன்று முதல் வெள்ளிக்கிழமை முதல் சென்னை சரம் என்விரோ பிரைவேட் லிமிடெட்  என்ற தனியார் நிறுவனத்தினர் தூய்மைப் பணியை மேற்கொண்டுள்ளனர். 

அரசின் டெண்டர் நிபந்தனை விதிமுறைபடி தூய்மைப் பணியாளர்களின் வயது வரம்பு 50க்குள் இருக்க வேண்டும் என்பதால் அந்த வயதிற்கு மேல் பணியாற்றி வந்த 30 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை அந்த நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் வினியோகிப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் நகராட்சி ஆணையாளர் விநாயகம்.

இப்போராட்டத்திற்கு பாஜக நகராட்சி கவுன்சிலர்கள் சசிரேகா ரமேஷ்குமார், ஈஸ்வரி செல்வராஜ், சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மார்க்சிய கம்யூணிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். 

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சியினரிடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் பேச்சுவார்த்தை நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட 30 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்தார். 

தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் காரணமாக பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல்  தேக்கம் அடைந்துள்ளது. அதே போல் சாக்கடை கால்வாய்களிலும் கழிவுகள் அகற்றப்படவில்லை. மேலும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com