
தஞ்சாவூர்: கல்லணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருவையாறுக்கு சனிக்கிழமை மாலை வந்தது.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையும் வெள்ளிக்கிழமை காலை திறந்துவிடப்பட்டது. தொடக்கத்தில் கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 100 கனஅடி வீதமும் திறந்துவிடப்பட்டது.
பின்னர், மாலையில் கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு காவிரியில் 3,009 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 3,004 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 501 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 709 கனஅடி வீதமும் எனவும் உயர்த்தப்பட்டது. காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருவையாறுக்கு சனிக்கிழமை மாலை வந்தது.
திருவையாறுக்கு சனிக்கிழமை மாலை வந்த தண்ணீரை வரவேற்று மகிழ்ந்த இளைஞர்கள், சிறுவர்கள்.
இதை அப்பகுதி மக்கள் காவிரிப் பாலத்திலிருந்தும், ஆற்றுக்குள் இறங்கியும் கண்டுகளித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் தண்ணீரில் விளையாடி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். பூசப்படித் துறையில் பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் காவிரியை வரவேற்று, விவசாயம் செழிக்க வேண்டியும், தட்டுப்பாடின்றி அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியும், தேங்காய் உடைத்து, தீபாராதனை செய்து, மலர்கள் தூவி வழிபட்டனர்.
இதேபோல, கல்லணையிலிருந்து, வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தஞ்சாவூர் மாநகருக்கு சனிக்கிழமை காலை வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.