
ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துக்கூற முடியாதா?. ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக இவர்கள் பேசலாமா என மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு பொய்யை உண்மையாக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர்.
மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி. மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய மத்திய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைத் தளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது.
பிரச்னை என்ன?
மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு. வெங்கடேசன் கள்ளமெளனம் காக்கிறார் என்பது தான்.
ஒரு நிதி அமைச்சருக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா?
இன்னொருவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர். அந்த இலாகாவை "பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்" என்று மாற்றி விடலாமா?
முழுவதும் வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்னை.
ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது. இதில் வேடிக்கை என்னவெனில் கருத்து சுதந்திரம் பற்றி மத்திய அமைச்சர்கள் பேசி இருப்பதுதான். உலகில் " இணையதள முடக்கம்" செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள். கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்த போதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண்.
"வதந்தி உங்கள் ஆயுதம். உண்மை எங்களின் கவசம்" என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.