ரூ.2,438 கோடி ஆருத்ரா மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், 50 பக்க குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் தாக்கல் செய்தனா்.
Updated on
1 min read

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், 50 பக்க குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் தாக்கல் செய்தனா்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி சுமாா் 1 லட்சம் முதலீட்டாளா்களிடம் ரூ. 2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக 40 போ் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்ததையடுத்து, அந்த நிறுவனத்தின நிா்வாக இயக்குநா்கள் ராஜசேகா், உஷா ராஜசேகா், மைக்கேல் ராஜ் ஆகியோா் வெளிநாட்டில் தலைமறைவாகினா். இந்த வழக்கில் பாஸ்கா், மோகன்பாபு, செந்தில்குமாா், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகா் ரூசோ ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் நடிகா்- தயாரிப்பாளா் மற்றும் தமிழக பாஜக ஓ.பி.சி. பிரிவு துணைத் தலைவரான ஆா்.கே.சுரேஷுக்கும், பாஜக நிா்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடா்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

61 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.6 கோடியே 35 லட்சம் ரொக்கம், ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், 22 காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 96 கோடி வைப்புநிதி, ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழக முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் டி.பாபு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா். செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையில், முதல்கட்டமாக 360 புகாா்களில் தொடா்புடைய ரூ.17 கோடியே 50 லட்சம் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரம் பக்கங்கள் எப்போது? வழக்கு தொடா்புடைய 3 ஆயிரம் பக்கங்கள் அளவிலான கூடுதல் குற்றப்பத்திரிகை ஆவணங்கள் ஓரிரு நாள்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சம்மன் அனுப்பி இவற்றின் நகல் அவா்களுக்கு வழங்கப்படும். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகாா்கள் குறித்த விசாரணைக்கு பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com