யோகா ஒரு சூத்திரம், உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

யோகா ஒரு சூத்திரம், உடலை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது, செலவின்றி உடலை சமப்படுத்தி பாதுகாக்க உதவுகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
யோகா ஒரு சூத்திரம், உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சிதம்பரம்: யோகா ஒரு சூத்திரம், உடலை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது, செலவின்றி உடலை சமப்படுத்தி பாதுகாக்க உதவுகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், யோகா துறை சார்பில் நடைபெற்ற உலக யோகா தின விழாவில், 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது துணைவியார் லட்சுமி ரவி ஆகியோர் பங்கேற்று பயிற்சி செய்தனர்.

ஆளுநருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன், 83 வயது யோகா பயிற்சியாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மெகா யோகா நிகழ்ச்சியை பல்கலைக்கழக யோகா மையத் தலைவர் வெங்கடாஜலபதி ஒருங்கிணைத்து நடத்தினர்.

பின்னர் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, யோகா மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அவர் பேசியது: ஆன்மீக நகரமான சிதம்பரம், ஆதியோகி நடராஜரின் இருப்பிடம், யோக ரிஷி பதஞ்சலி, திருமூலர் இருந்து வழிபட்ட இடம் இது. மெகா யோகா பயிற்சி  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். 83 வயதான மூத்த யோகா பயிற்சியாளர் பா.கிருஷ்ணன் பங்கேற்று பயிற்சி செய்ததைப் பாராட்டுகிறேன்.

மேலும் இளம் வயது சிறுமி வி.ரவீனா திருக்குறள் 113 அதிகாரத்திற்கு யோகா செய்தது சிறப்பாக இருந்தது. ராமேஸ்வரம் தேவிப்பட்டினத்திலிருந்து ஆதியோகா அறக்கட்டளையிலிருந்து வந்து இங்கு யோகா செய்த குழுவினரை பாராட்டுகிறேன். கின்னஸ் சாதனையாளர் சுபானுவின் சிவதாண்டவ யோகா செயல்விளக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. யோகா உலகிற்கு தந்த நமது நாட்டின் பரிசு. சிதம்பரம் யோகா கலை உருவான இடம். உருவாக்கியவர்கள் இருந்த இடம். இங்கு பிறப்பிடமாக தொடங்கிய யோகா, நாடு முழுவதும் பரவியது. இன்று ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் இயற்றிய திருமந்திரத்தை பதஞ்சலி முனிவர் பயன்படுத்தினார். ஆசனங்களை பல தளங்களில் செயல்படுத்தி புதுமைகளை செய்திருக்கிறார். யோகா ஒரு சூத்திரம். உடலை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. செலவின்றி உடலை சமப்படுத்தி பாதுகாக்க உதவுகிறது. யோகா நமது வாழ்க்கை. பதஞ்சலியின் வழிபாடுடன் தொடங்கி முடியும் யோகா ஒரு அமைதியான சூழலை உருவாக்க உதவவுகிறது. நமது மனது பலவற்றை பற்றி சிந்திக்கும்போது அதனை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவுகிறது. நமது உடல் முக்கியம் அதனை பாதுகாக்க யோகா உதவுகிறது. தமிழகத்தில் குறிப்பாக சிதம்பரம் யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. அதனை நாம் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது.

இன்று நாம் வாழ்க்கை முறை காரணமாக அதிகளவு பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளோம். சர்க்கரை நோய் பரவும் தன்மை கிடையாது. எனவே, நமது வாழ்க்கை முறையை யோகா பயிற்சி கொண்டு மாற்றும்போது சர்க்கரை நோய் இல்லாமல் வாழ முடியும். யோகா கலை பயிற்சியை கிராமங்கள், நகரங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரப்ப வேண்டும். அப்போது நமது உடல் நலத்தை எளிய முறையில் செலவின்றி பாதுகாக்க முடியும். எனது சிறிய வயதில் பள்ளி பருவத்திலிருந்து யோகா செய்வதால் நல்ல உடல்நலத்தை பெற முடிந்தது. மருத்துவர்கள் எனது உடல் நலத்தை பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். எனது உடல்நலத்திற்கு யோகா முக்கிய காரணமாக உள்ளது. இன்று அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் நகரில் உள்ள தலைமை செயலகத்தில் நமது பாரத பிரதமர் தலைமையை யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது . இது நமக்கு பெருமிதமான நிகழ்வு. யோகா நமது நாட்டின் பெருமை. இதனை நாம் வாழ்வில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது, நம்மால் வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், சோதனைகளை நமது உடல் மற்றும் மன நலத்தையும் பாதுகாத்து சிறப்பாக செயல்படுத்த பெரிதும் துணை புரிகிறது என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

விழாவில் ஆளுநரின் ஆலோசகர் எஸ்.திருஞானசம்பந்தம், ஏஎஸ்பி பி.ரகுபதி, உதவி ஆட்சியர் சுவேதாசுமன், உடற்கல்வித்துறை இயக்குநர் செந்தில்வேலன், யோகா மைய இயக்குநர் வெங்கடாஜலபதி, மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதிவாளர் ரா.சிங்காரவேலு நன்றி கூறினார்.

முன்னதாக மெகா யோகா நிகழ்ச்சியில் 83 வயது மூத்த யோகா பயிற்சியாளர் கிருஷ்ணனின் யோகா செயல்விளக்கமும், 'யோகாவில் 133 திருக்குறள் அதிகாரம்' என்ற தலைப்பில் 9 வயது சிறுமி இளம் சாதனையாளர் வி.ரவீனாவின் யோகா நிகழ்ச்சியும்,  ராமேஸ்வரம் தேவிபட்டினம் சேர்ந்த மாணவர்கள் குழுவினரின் யோகா பயிற்சி, கின்னஸ் சாதனையாளர் சீர்காழியைச் சேர்ந்த  சுபானுவின் 108 சிவதாண்டவத்தின் யோகா செயல்விளக்கமும், கடலூர் ஹேமந்த் அகாதெமி ஆதரவற்றோர் குழந்தைகள் யோகா பயிற்சியும், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, கிருடா பாரதி வட தமிழகம் கேலோ இந்தியா மற்றும் புதுச்சேரி மால்காம் சத்ரிய அகாடமி இணைந்து மாணவர்களின் மல்லர் கம்பத்தில் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com