பெண்ணுக்குத் தவறான சிகிச்சை: ஸ்ரீவாஞ்சியத்தில் கிராமத்தினர் சாலை மறியல்

ஸ்ரீவாஞ்சியம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பாதிக்கப்பட்டப் பெண் மற்றும் குழந்தையுடன் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . 
தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் - ஸ்ரீவாஞ்சியத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர் .
தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் - ஸ்ரீவாஞ்சியத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர் .

நன்னிலம்: பெண்ணுக்கு பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளித்ததைக் கண்டித்து  ஸ்ரீவாஞ்சியம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பாதிக்கப்பட்டப் பெண் மற்றும் குழந்தையுடன் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . 

நன்னிலம் அருகில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் உடையார்குளத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் முத்துலெட்சுமி (21). இவர் பிரசவத்திற்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே மாதம்  முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

மே மாதம் 29 ஆம் தேதி இப்பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் முத்துலெட்சுமி தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்களும், கணவரும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது மருத்துவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முத்துலெட்சுமி சிறுநீர் மற்றும் கழிவுப் பொருள்கள் இரண்டும் உடலின் ஒரே பகுதியிலிருந்து வெளியாவதாகக் கூறியுள்ளார். 

இதனால் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லாத பெண்ணின் பெற்றோர்கள், புதன்கிழமைப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.  இந்நிலையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்ணுக்கு,  பிரசவத்தின் போது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாப்பிள்ளைக்குப்பம் குடவாசல் மாநில நெடுஞ்சாலையில் ஸ்ரீவாஞ்சியம் பேருந்து நிலையம் அருகே பாதிக்கப்பட்டப் பெண் மற்றும் குழந்தையுடன் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

சாலை மறியல் காரணமாக, ஸ்ரீவாஞ்சியத்தில் காலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனையறிந்த நன்னிலம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படு என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com