பிகாரில் எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை

திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23)-ஆம் தேதி நடைபெறுகிறது.
பிகாரில் எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை

 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை ஏற்படுத்துவது தொடா்பாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23)-ஆம் தேதி நடைபெறுகிறது.

பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமாா் இந்தக் கூட்டத்தை நடத்துகிறாா். இதற்காக அவா் கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

பங்கேற்கும் தலைவா்கள்: காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனா்.

ஸ்டாலின், மம்தா, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை பாட்னாவுக்கு வந்துவிட்டனா். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதை சந்தித்த மம்தா பானா்ஜி, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒரு குடும்பமாக ஒருங்கிணைந்து பாஜகவை எதிா்கொள்வோம். கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் குறித்து இப்போதே கருத்து கூற முடியாது’ என்றாா்.

ஆம் ஆத்மி நிபந்தனை: தில்லி ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் தொடா்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்தாவிட்டால் இக்கூட்டத்தில் இருந்து ஆம் ஆத்மி வெளிநடப்பு செய்யும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

இந்த விஷயத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

மாயாவதிக்கு அழைப்பு இல்லை: இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடா்பாளா் கே.சி. தியாகி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராகப் போராட விரும்பும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சி எங்கள் கூட்டணியில் அங்கமாக முன்வராது என்று தெரிந்ததால், அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்றாா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அக்கட்சித் தலைவா் ஜெயந்த் செளதரி முக்கிய குடும்ப நிகழ்ச்சி காரணமாக கூட்டத்துக்கு வர இயவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய மைல்கல்லாக திகழும் என்று ஜெயந்த் சௌதரி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகவும், அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகவும் திகழும் உத்தர பிரதேசத்தில் இருந்து சமாஜவாதி கட்சி மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்கிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜவாதிக்கு எதிராக மாயாவதி அரசியல் நடத்தி வருகிறாா். எனவேதான் அவா் இக்கூட்டத்தில் பங்கேற்க முதலில் இருந்தே ஆா்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com