
பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை வழங்கப்படும் என கனிமொழி எம்.பி. உறுதியளித்தார்.
கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாகவும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை வெள்ளிக்கிழமை காலை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி பயணித்தபோது பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஷர்மிளா கூறுகையில், தான் விளம்பரத்திற்காக பேருந்தில் ஆள்களை ஏற்றுவதாக பேருந்தின் உரிமையாளர் பேசியதாக வேதனையுடன் தெரிவித்த ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பயணச்சீட்டு எடுத்துதான் பயணித்தனர் என்றார்.
கனிமொழி பேருந்தில் பயணித்தபோது அவருடன் வந்தவர்களிடம் நடத்துநர் கடுமையாக நடந்ததை கண்டித்தேன் என அவர் கூறினார். சில நாள்களுக்கு முன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பலராலும் பாராட்டவர் ஷர்மிளா என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.