திருச்செந்தூர் கோயில் காணிக்கையான 211 கிலோ தங்க நகைகள் வங்கியிடம் ஒப்படைப்பு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வைப்புத்தொகையாக பாரத ஸ்டேட் வங்கியிடம் வழங்கப்பட்டது. 
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 211.546 கிலோ தங்க நகைகளை பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளரிடம் வழங்கிய அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 211.546 கிலோ தங்க நகைகளை பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளரிடம் வழங்கிய அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வைப்புத்தொகையாக பாரத ஸ்டேட் வங்கியிடம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழக மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.மாலா, அறநிலையத்துறை சிறப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளிதரன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பாரத ஸ்டேட் வங்கி பொதுமேலாளர் கோவிந் நாராயணன் கோயலிடம்  211.546 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை  ஒப்படைத்தார்.

தொடர்ந்து அமைச்சர்கள் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியினையும், அறநிலையத்துறை ஆணையர் திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நிகழ்ச்சியில், திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் செந்தில்வேலவன், வெங்கடேசன், மண்டல ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் சங்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி,   திருக்கோயில் அறங்காவலர்கள் பா.கணேசன், வி.செந்தில் முருகன், பாரத ஸ்டேட் வங்கி துணை பொதுமேலாளர் ஆனந்த், செந்தில்குமார், திருச்செந்தூர் கிளை மேலாளர் வித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மண்டல உதவி ஆணையர் அன்புமணி நன்றி கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

திருச்செந்தூர் கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடியும், அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடியில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஹெச்.சி.எல். நிறுவன பணியில் 3 லட்சம் சதுர அடியில் பணிகள் தொடங்கி 30 சதவீதம் நடைபெற்றுள்ளது. திருக்கோயில் சார்பில் ரூ. 100 கோடி பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளது.

தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, திருக்கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்பாடற்ற நிலையில் இருந்த பலமாற்று தங்க நகைகளை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பிரித்தெடுக்கும் பணி 3 மண்டலங்களாக நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் கோயிலில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.மாலா தலைமையில் பிரித்தெடுக்கப்ட்ட 211.546 கிலோ எடையுடைய சுமார் 100 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை மும்பையிலுள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் உருக்கி சுத்த தங்கமாக மாற்றி வங்கியில் 5 வருடத்திற்கு நிரந்தர வைப்புத்தொகையாக வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ. 2 கோடியே 58 லட்சம் வருவாயாக 5 ஆண்டுகளுக்கு ரூ. 12 கோடியே 50 லட்சம் வருவாயாக கிடைக்கும்.

திருக்கோயிலில் பயன்பாடற்று இருந்த நகைகள் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே முதல்வர் எடுத்த துரித முடிவால் வங்கி மூலம் கிடைக்கும் வருவாய் திருக்கோயில் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் தமிழகத்தில் முதற்கட்டமாக இருக்கன்குடி, பெரியபாளையம், திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டு, நிறைவு பெற்றுள்ளது. தற்போது 10 கோயில்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. மேலும் 10 கோவில்களில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

வரும் காலங்களில் தங்கம் சேருவதற்கு ஏற்ப நகைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெறும். அதுபோல வெள்ளியும் விரைவில் தரம் பிரிக்கும் பணி நடைபெறவுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் தற்போது நடைபெறும் பெருந்திட்ட வளாகப்பணிகளில் காவடி, அலகு குத்தி மற்றும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், கர்ப்பிணிப்பெண்கள், வயோதிகர்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்ற வழக்குப்பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயில் இராஜகோபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய வெண்கல மணியை மீண்டும் செயல்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com