1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்!

ஜேடர்பாளையம் அருகே பாக்கு தோப்பில் இருந்த 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை நள்ளிரவில் வெட்டி சாய்த்த மர்ம நபர்கள். தொடரும் வன்முறை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.
1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்!

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே பாக்கு தோப்பில் இருந்த 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை நள்ளிரவில் வெட்டி சாய்த்த மர்ம நபர்கள். தொடரும் வன்முறை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் வட்டம், வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,  வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள் என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் இரு மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 13ஆம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் மீது மண்ணெண்னை குண்டு வீசி தீ வைத்தனர்.

இதில் 4 வெளிமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் கென்ட் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், மீண்டும் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

அதேபோல் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சௌந்தர்ராஜன். இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது .அதில்  2 ஏக்கரில் சுமார் 3,000பாக்கு  மரம் நடவு செய்துள்ளார்.

இந்நிலையில் அருகே உள்ள தோட்டத்து விவசாயி தங்கமுத்து தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சுமார் 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலத்தின் உரிமையாளர் சௌந்தர்ராஜனுக்கும்,ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து  அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா  தலைமையிலான போலீஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிகழ்விடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட கைரேகை கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தரத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருவதால் அடுத்து எந்தெந்த பகுதிகளில் என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே  அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com