பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். 
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். 

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, நிகழாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் ஜூலை 2-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2.29 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். அவா்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ஆம் தேதி ஒதுக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து மாணவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு பணிகள் இணைய வழியில் நடைபெற்று முடிந்த நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

பொறியியல் படிப்பில் சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் 28,425 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல்  வழங்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் 102 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

அதில், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் சைதைபேட்டையை சேர்ந்த மகாலட்சுமி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடமும், நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா இரண்டாமிடமும், கோவையை சேர்ந்த சரவணகுமார் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் புதுமை பெண் திட்டத்தில் பயணடைகின்றனர். 

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை தெரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார்.

தரவரிசை தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com