திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையரைக் கண்டித்து மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சாக்கடையை தூய்மைப்படுத்த ஆள்களை நியமிக்காத திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையரைக் கண்டித்து மன்ற உறுப்பினர்கள் தொடர்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர் மன்ற உறுப்பினர்கள்.
ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர் மன்ற உறுப்பினர்கள்.
Published on
Updated on
1 min read

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் சாக்கடையை தூய்மைப்படுத்த ஆள்களை நியமிக்காத ஆணையரைக் கண்டித்து, மன்ற உறுப்பினர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டம், கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர மன்றத் தலைவர் குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் முன்னிலை வகித்தார். 

கூட்டம் தொடங்கியதும் திமுக நகர மன்ற உறுப்பினர் பாரதி பேசியதாவது: மன்ற பொருள் அறிக்கையில் நிதி பற்றாக்குறையை காண்பித்துள்ளீர்கள். ஆனால் வீட்டு வரி செலுத்த வந்தவர்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. வருமானத்தை கிடப்பில் போட்டுவிட்டு அலட்சியப்படுத்துகின்றனர். வீடு பெயர் மாற்றம் என வந்தவர்களிடம் நகராட்சி ஆணையர், மக்கள் வீட்டுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வதாகக் கூறி அவர்களிடம் கையூட்டு கேட்கிறார். கேட்டால் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறுகிறார். இதனால் அலைக்கழிக்கப்பட்ட கணவன், மனைவி கண்ணீர் விட்டு கதறுகின்றனர் என்றார். 

அதிமுக லதா சேகர் பேசுகையில், நகராட்சியில் இல்லாத ஆள்களுக்கு சம்பளம் எடுத்துக் கொள்கிறார்கள். உரிய வரவு செலவு காண்பிக்கும் வரை, ஆணையர் எந்த காசோலைகளிலும் கையெழுத்து போடக் கூடாது. சாக்கடைகளை தூய்மைப்படுத்த நகர்மன்றத்தில் உள்ள 27 வார்டுகளுக்கும் தனித்தனியாக ஆள்களை நியமிக்க வேண்டும். நியமிக்கும் வரை கூட்டத்தை தொடரக்கூடாது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் தேவராஜ்,  திருமுருகன் பூண்டியில் கொசு மருந்து அடிக்கவே இல்லை. ஆனால் கொசு மருந்து அடித்ததாக செலவு கணக்கு கூறியுள்ளார்கள் என்றார்.

இந்த காரணங்களை முன்வைத்து அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 மணி நேரத்திற்கு மேலாகியும், சாக்கடையை தூய்மைப்படுத்த ஆள்களை நியமிக்க ஆணையர் தீர்மானம் நிறைவேற்றாததால், கூட்டத்தை ஒத்திவைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.