
சேலம்: பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சேலம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டிய பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அவருக்கு கருப்புக் கொடி காண்பிக்க சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்பாக பலரும் திரண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கட்சி கொடிகளுடன் திரளாக திரண்டனர்.
இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா. விஜயகுமாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோவையில் இருந்து கார் மூலம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் ஒன்பது கட்சிகளை சேர்ந்த 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து திராவிட கொள்கைக்கு எதிராகவும், பாஜகவின் கொள்கையை திணிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் அதைக் கண்டிக்கும் வகையில் கருப்புக் கொடி காண்பிக்க திரளாக வந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.