
சென்னை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளை (எல்பிஜி), அதேப்போல் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை உயர்த்தி உள்ளதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வீடு, வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
வீட்டு பயன்பாட்டு எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50, வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகளுக்கு ரூ.350 உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திரிபுரா, மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்தியிருப்பது மோசடியான செயல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிக்கிறது.
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1118.50 காசுகளும், உணவகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டு உருளை விலை ரூ.2268 ஆக உயர்த்தியிருப்பது என்பது பொறுப்பற்ற நடவடிக்கை என்பதோடு, நடுத்தர, ஏழை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
மத்திய அரசின் மிக மோசமான சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை வன்மையாகக் கண்டிப்பதுடன் திரும்பப் பெற வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.