ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, 20 மாத திமுக திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார். இதையொட்டி திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க | 'மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு இது எடுத்துக்காட்டு'
அப்போது அவர், 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள், மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாகக்கூடிய மாபெரும் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டேன். அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரசாரத்தில் 4 ஆம் தர பேச்சாளரைப்போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி.
20 மாத திமுக - திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், வெற்றிக்காக உழைத்த அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.
நாடாளுமன்றத் தேர்தலில் இதைவிட மாபெரும் வெற்றி பெறுவோம்' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், 'நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் இருக்கிறேன். அதுகுறித்துதான் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறேன்.
யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் இப்போதைய எங்கள் கொள்கை' என்றார்.