கச்சா எண்ணெய் குழாய் கசிவு நிறுத்தப்பட்டது: சி.பி.சி.எல்

காரைக்கால் துறைமுகம் அருகே கடற்பகுதியில் உடைந்த சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் சீரமைக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் குழாய் கசிவு நிறுத்தப்பட்டது: சி.பி.சி.எல்

காரைக்கால் துறைமுகம் அருகே கடற்பகுதியில் உடைந்த சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் சீரமைக்கப்பட்டது. கடலில் கலந்த கச்சா எண்ணையை கடலோர காவல் துழுமத்தினர், சிபிசிஎல் நிர்வாகத்தினர் இன்று அகற்றினர்.

நாகை மாவட்டம், நரிமணம் மற்றும் பனங்குடியில் இயங்கி வரும் சி.பி.சி.எல். நிறுவனம் மூலம் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, லாரி, கப்பல்கள் மூலம் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நரிமணத்தில் இருந்து கப்பல்களுக்கு எண்ணெய் எடுத்துச் செல்ல சாமந்தான்பேட்டை வழியாக நாகூா் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை நிலத்தடியில் குழாய் புதைக்கப்பட்டு, கப்பலில் வரும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லவும் இந்தக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குழாயில் உடைப்பு

பட்டினச்சேரியில் உள்ள குழாயில் வியாழக்கிழமை நள்ளிரவு உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் ஏற்பட்ட நெடி, வாயுவால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

கிராம மக்களுக்கு வெள்ளிக்கிழமை காலையில்தான் குழாயில் உடைப்பு குறித்து தகவல் தெரிய வந்தது. பட்டினச்சேரி கடற்கரையில் இருந்து சாமந்தான் பேட்டை கடற்கரை வரை கடலில் எண்ணெய் படலம் பரவியிருந்தது.

கப்பல்கள், விமானம் வருகை

கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால், மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். கடலில் சுமாா் 50 மீட்டா் தொலைவுக்கு நீா் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது.

கடலோரக் காவல் படைக்கு சொந்தமான சாா்லி 435, 436 கப்பல்கள், கச்சா எண்ணெய் படா்ந்துள்ள தொலைவு, பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டன. டோனியா் விமானம் மூலமும் கச்சா எண்ணெய் பரவல் கண்காணிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம்

சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து பட்டினச்சேரி கிராம மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். குழாய் உடைப்பை சரிசெய்ய வந்த சிபிசிஎல் அதிகாரிக்கும் கிராம மக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில் அதிகாரியை சிலா் கடலில் தள்ளினா். பதற்றம் அதிகரித்ததால், சம்பவ இடத்துக்கு சென்ற உதவி ஆட்சியா் பானோத் ம்ரூகேந்தா் லால், வட்டாட்சியா் ராஜசேகரன், ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது சிபிசிஎல் நிறுவனத்தின் குழாய்களை முழுமையாக அகற்ற வேண்டும், மீனவா்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

குழாய் உடைப்பு சீரமைப்பு பணி நடைபெறட்டும், இழப்பீடு குறித்து சிபிசிஎல் நிறுவனத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உதவி ஆட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து, குழாய் சீரமைப்புக்கு மக்கள் அனுமதித்தனா். கடல் சீற்றம் அதிகரித்ததினால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடலில் கலந்த கச்சா எண்ணையை அகற்றிவிட்டதாக சிபிசிஎல் நிர்வாகத்தினர் இன்று தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com