வதந்திகளை வட மாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம்: சிராக் பஸ்வான்

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை வட மாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். 
வதந்திகளை வட மாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம்: சிராக் பஸ்வான்


சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை வட மாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஈரோடு, திருப்பூா், கோவை, சென்னை போன்ற இடங்களில் தாக்கப்படுவது போன்ற விடியோ தொடா்ந்து பரவி வந்தது. இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவில்லை.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காவல் துறை தலைவா் சைலேந்திரபாபு ஆகியோா் அந்த விடியோ உண்மை இல்லை எனவும், போலியானது எனவும் தெரிவித்துள்ளனா். 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவா்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் மீது தூத்துக்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் பிரசாந்த் உமாராவ். இவா் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு சென்ற வட மாநிலத்தவா்கள் தாக்கப்படுவதாகவும், உயிரிழப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்படுவதாகவும் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருந்தாராம். உண்மைக்குப் புறம்பான இந்தப் பதிவு பரவியதையடுத்து, பிரசாந்த் உமாராவ் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு உத்தரவிட்டாா். அதன்படி, தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில், பொய்யான தகவல்களை பரப்பி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரசாந்த் உமாராவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடிக்க டிஎஸ்பி விஜயராஜ், காவல் ஆய்வாளா் ஐயப்பன், உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் தலைமையிலான தனிப்படையினா், சனிக்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனா்.

இந்நிலையில், பிகாரில் இருந்து விமானம் மூலம்  திங்கள்கிழமை சென்னை வந்த லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பஸ்வான் எம்.பி., பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பிகார் மாநில தொழிலாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பஸ்வான், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை வடமாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது.

பிகார்-தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.

வலைதளங்களில் போலியான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று சிராக் பஸ்வான் கூறினார். 

இதனைத் தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சிராக் பஸ்வான், ஆளுநரை சந்தித்து புலம் பெயர்ந்த பிகார் தொழிலாளர்களின் பிரச்னைகள் தொடர்பான மனுவை ஆளுநரிடம் அளித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com