தமிழகம் முழுவதும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பயணம்! ஜூன் 25ல் தொடங்குகிறது
ஜூன் 25 வெண்புள்ளிகள் தினத்தையொட்டி வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
வெண்புள்ளி என்பது ஒரு நோயல்ல; அது தொற்றும் தன்மை கொண்டதல்ல என்று உலகம் முழுவதுமே பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில், 'வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்' சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை 38 மாவட்டங்களுக்கு 76 நாட்கள் ஒரு பயணம் நடைபெற உள்ளது. ஜூன் 25,2023 உலக வெண்புள்ளிகள் தினத்தன்று இந்த பயணம் தொடங்கும்.
இதுகுறித்து வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் கே.உமாபதி கூறியதாவது:
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா கடந்த 18 வருடங்களாக வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
வெண்புள்ளிகள் நோயல்ல; அது தொற்றும் தன்மை கொண்டதல்ல; பரம்பரை பரம்பரையாக வருவதல்ல என்ற அறிவியல் உண்மையை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பேரணிகள், மனிதச் சங்கிலிகள், பொதுமக்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, பள்ளிகள், கல்லூரிகளில் தொடர்ந்து கருத்தரங்குகள் நடத்தி அடுத்த தலைமுறையிடம் வெண்புள்ளிகள் குறித்த அறிவியல்பூர்வமான உண்மைகளை எடுத்துக்கூறி வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
“லூகோடர்மாவை” வெண்குஷ்டம் என்று தமிழில் தவறாக அழைக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்தது. உண்மையில் “லூகோடர்மா” எனப்படும் வெண்புள்ளிகளுக்கும் “குஷ்டம்” எனப்படும் தொழுநோய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த உண்மையை அரசாணையாக வெளியிட அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். 27.12.2010 அன்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அரசாணை ஒன்றினை வெளியிட்டது.
'வெண்குஷ்டம்' என்று தமிழில் அழைப்பதைத் தடை செய்து இனி வெண்புள்ளிகள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அதுமட்டுமல்ல, வெண்புள்ளிகள் நோயல்ல, தொற்றும் தன்மை கொண்டதல்ல, பரம்பரை பரம்பரையாக வருவதல்ல என்ற அறிவியல் உண்மையையும் அந்த அரசாணையில் வெளியிட்டுள்ளது.
வெண்புள்ளிகள் கொண்ட மாணவர்களை சில பள்ளிகள், கல்லூரிகள் பாரபட்சமாக நடத்தின. இந்த பாரபட்ச நடவடிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் . அதனைக் களைய சுற்றறிக்கை வெளியிடுமாறு வேண்டினோம்.
நமது கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த அரசு, வெண்புள்ளிகள் உள்ள மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்கும் போதோ அல்லது பள்ளி, கல்லூரிகளில் பயிலும்போதோ பாரபட்சமாக நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
வெண்புள்ளிகள் உள்ளவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு கைநிறைய சம்பாதித்தாலும் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்களின் திருமணம் கேள்விக்குறியே.
இந்த நிலைமையைப் போக்க வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கான சுயம்வரம் நடத்தி வருகிறோம். இதுவரை 387 ஜோடிகள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்நதெடுத்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர்.
1996 ஆம் ஆண்டு முதல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் வெண்புள்ளிகள் குறித்த மக்களின் பார்வையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியதை உணர்ந்தே உள்ளது.
வெண்புள்ளிகள் உள்ளவர்கள் பிறரைப் போல இயல்பாக வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்தும் வகையில் "ஒவ்வொரு தோலின் நிறமும் உன்னதமானது" என்ற தலைப்பில், வெண்புள்ளிகள் நோயல்ல, பிறருக்கு தொற்றாது, பரம்பரை பரம்பரையாக வராது, என்ற அறிவியல் உண்மையை மாணவர்கள் வாயிலாக தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல மாணவர் சந்திப்பு பயணம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக ஜூன் 25,2023 உலக வெண்புள்ளிகள் தினத்தன்று கன்னியாகுமரி முதல் சென்னை வரை 38 மாவட்டங்களுக்கு 76 நாட்கள் வேனில் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
இந்த பயணத்தின் வாயிலாக வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு பெற்ற முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற உள்ளோம்.
இந்த விழிப்புணர்வு பயணம் வெற்றி பெற தங்களின் உதவியை கோருகிறோம். தங்களின் இந்த உதவி தமிழகத்தில் உள்ள 37 லட்சம் வெண்புள்ளிகள் உள்ளவர்களின் குடும்பங்களில் ஒளியேற்ற உதவும். அந்த குடும்பங்கள் இழந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.