நிலக்கரி ஒப்பந்த விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி

நிலக்கரி ஒப்பந்த விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நிலக்கரி ஒப்பந்த விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி

நிலக்கரி ஒப்பந்த விவகாரத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனல் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்ய இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, எண்ணூர், மேட்டூர் அனல் மின் நிலையங்களுக்கு கப்பல் மூலமாகவும், சரக்கு ரயில்கள் மூலமாகவும் கொண்டு செல்லப்படும். கடந்த 2000-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2019 ஆம் ஆண்டு வரை செளத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது. அந்நிறுவன ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்ய முயன்ற போதும் பலமுறை தடையாணைப் பெற்று ஒப்பந்தத்தை தொடர்ந்தது.

நிலக்கரியை கையாளுவதில் ஊழல் நடைபெற்றதாக ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டு என் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டேன். இந்த நிலையில் கடந்த 3, 4-ஆம் தேதிளில் வெளியான நாளிதழ் ஒன்றிலும், தொலைக்காட்சிகளிலும் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியாகின.

அதில் 2011 முதல் 2016 ஆட்சி காலத்தில் ரூ.908 கோடி ஊழல் நடைபெற்றதாக எனது பெயரை இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர். நான் தவறு செய்தது போல அதில் குற்றம் சாட்டியிருந்தனர். லஞ்ச ஒழிப்புத் துறையால் மீண்டும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி முறைகேடு விவகாரத்தில் என்னுடைய பங்கு இருப்பது போலவும் தெரிவித்துள்ளனர். அது பற்றி விளக்கம் அளிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பை தற்போது மேற்கொண்டுள்ளேன்.

2000 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் அந்த செளத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. 2001-இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் நீதிமன்றம் மூலம் தடையாணை பெற்றது. அடுத்து வந்த 2006  திமுக ஆட்சியிலும் அந்நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை மறுப்பதற்கு இல்லை. அதுவரையில் சம்பந்தப்பட்ட  நிறுவனத்திற்கு தொழிலாளர் கூலி, இதர சலுகைகளுக்கான கூலியானது தொடர்ந்து மின்சார வாரியம் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

2001 முதல் 2019 வரை முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்படி என்றால் 2006 திமுக ஆட்சியிலும் நிலக்கரி விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதா என்ற கேள்வி எழுகிறது.

2011 முதல் 2016 வரை எங்களுடைய ஆட்சியில் நான் மின்துறை அமைச்சராக பதவியில் இல்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் ரூ.908 கோடி முறைகேடு செய்ததாக தவறான தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் முதல்வரின் பார்வைக்கு சென்று பதிவு செய்யப்பட்டதா என தெரியவில்லை. 2016 க்கு பிறகு தான் சம்பந்தப்பட்ட செளத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம்.

2019ல் முழுமையாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மாற்றி கொடுக்கப்பட்டது. 2016 முதல் 2019 வரையில் செளத் இந்தியா கார்ப்பரேஷன்  நிறுவனத்திற்கு ஒரு ரூபாய் கூட நாங்கள் செலுத்தவில்லை. அந்நிறுவனத்திடமிருந்து இருந்து ரூ.62 கோடி மீட்டுள்ளோம். அவ்வாறு இருக்கையில் ரூ.908 கோடி அளவில் நிலக்கரி கையாளுவதில் நான் முறைகேடு செய்திருப்பதாக  வெளியான தகவல்கள் தவறானவையாகும்.

என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்த நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி மீது வழக்கு தொடர்ந்து உரிய நீதி கிடைக்கும் வரை போராடுவேன். 2016 முதல் 2021 வரையில் மின்சார துறை அமைச்சராக இருந்து பல்வேறு சீர்திருத்தங்களை அத்துறையில் கொண்டு வந்துள்ளேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும், என் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com