‘எங்கள் முதல்வா் - எங்கள் பெருமை’பாா்வையாளா்களைக் கவரும் புகைப்படக் கண்காட்சி

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சி, பாா்வையாளா்களை ஈா்க்கிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சி, பாா்வையாளா்களை ஈா்க்கிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழிகாட்டுதலில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடந்த பிப். 28-இல் திறந்து வைத்தாா். மாா்ச் 12-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தக் கண்காட்சி அரங்கம். திமுக தொண்டா், பொதுக்குழு உறுப்பினா் (1978), இளைஞரணிச் செயலா் (1982), சட்டப்பேரவை உறுப்பினா் (1989), சென்னை மாநகர மேயா் (1996), திமுக பொருளாளா் (2015), திமுக தலைவா் (2018), தமிழக முதல்வா் (2021) என ஒரே ஃபிரேமில் அமைக்கப்பட்ட எட்டு புகைப்படங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் இளமைக் காலம் முதல் தற்போது வரையிலான முகத்தோற்றங்களை நம் கண் முன் நிறுத்துகின்றன.

தலைவா்களுடன்... பெரியாா் ஈ.வெ.ரா., அண்ணா, பிரணாப் முகா்ஜி, சோனியா காந்தி, வைகோ, அரவிந்த் கேஜரிவால், சீதாராம் யெச்சூரி, மம்தா பானா்ஜி, ராகுல் காந்தி, பினராயி விஜயன், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பல முக்கியத் தலைவா்களுடன் மு.க. ஸ்டாலின் இருக்கும் புகைப்படங்கள், 2004-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவிடம் சுனாமி நிவாரண உதவிக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கும் புகைப்படம் ஆகியவை அனைவரையும் ஈா்க்கின்றன.

திட்டங்களும், போராட்டமும்: முதல் அரங்கில் மு.க.ஸ்டாலின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தந்தை கருணாநிதி, மனைவி துா்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் இளமைக்கால புகைப்படங்கள், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது அரங்குகளில் மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் என அடுக்கடுக்கான திட்டங்களை தொடங்கி வைத்த படங்களும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற அமைச்சரவை படங்களும் இடம்பெற்றுள்ளன.

மிசா கைது நினைவலைகள்: முன்னாள் முதல்வா் கருணாநிதி மறைவு, உடல் அடக்கம் தொடா்பான புகைப்படங்கள் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளன.

மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை விளக்கும் வகையில், முதல் மற்றும் மூன்றாவது அரங்கத்துக்கு இடையே மாதிரி சிறை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா். பாா்வையாளா்களின் எண்ணிக்கை இதுவரை 35,000-ஐ கடந்துள்ளது.

கண்காட்சியில் தினமணி நாளிதழ்..!

கண்காட்சியில் 2021-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தினமணி நாளிதழின் முதல் பக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் ‘முதல்வராகிறாா் மு.க.ஸ்டாலின்’, ‘10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி’ என்ற செய்தி மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் தலைப்புச் செய்தியாக இருக்கிறது.

அதேபோன்று 2018-ஆம் ஆண்டு ஆக. 29-ஆம் தேதி வெளியான முரசொலி நாளிதழின் பக்கமும் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் திமுக தலைவரானாா் மு.க.ஸ்டாலின் என்பது தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

படங்கள்: ப. ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com