மேற்கு மண்டலத்தில் ஜவுளிப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின்

மேற்கு மண்டலத்தில் அடுத்தாக ஒரு ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கு மண்டலத்தில் ஜவுளிப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின்

மேற்கு மண்டலத்தில் அடுத்தாக ஒரு ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டியில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது, ஜவுளித்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்திடும் வகையில், மாநிலமெங்கும் பல இடங்களில் ஜவுளிப் பூங்காக்களை உருவாக்கிட இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், மேற்கு மண்டலத்தில் அடுத்தாக ஒரு ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

நெசவுத்தொழிலுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கிடும் வகையில், தறித் தொழிற்சாலைகளுக்குத் தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவற்றிற்கான அனைத்து பொதுக்கட்டமைப்பு வசதிகளும் அளிக்கப்படும்.  இதன் மூலமாக ஜவுளிப் பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ள இயலும்! இது எனது அரசு அல்ல, நமது அரசு, ஏன், உங்கள் அரசு. உங்களுக்காக உழைக்கத்தான் நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனே தவிர - வேறல்ல. இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். மேற்கு மண்டலத்தில் நாங்கள் செல்வாக்கானவர்கள் என்று மார்தட்டிக்கொண்டிருந்த அதிமுக ஆட்சியானது கடந்த பத்தாண்டு காலத்தில் இந்த மண்டலத்திற்கு என்ன சாதனை செய்திருக்கிறது என்று கேட்டால், ஒன்றும் கிடையாது.

தொழில் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. புத்தாக்கத் தொழில்களை உருவாக்கவில்லை.  ஆனால் நம்முடைய ஆட்சியில், திமுக ஆட்சியில் ஏராளமான தொழில்களை கொண்டு வந்திருக்கிறது. பெரிய தொழில்கள் மட்டுமல்ல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இத்தொழில்களின் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை பெற்றிருப்பதோடு, பிற மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகிறார்கள். இப்படி தமிழ்நாடு என்பது தொழில்வளர்ச்சியில் சிறந்த - அமைதியான - அனைவருக்கும் வாழ்வு தரும் மாநிலமாக இருப்பது சிலரது கண்களுக்கு பொறுக்கவில்லை.

வதந்திகள் மூலமாக – பொய்களை பரப்பி இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், முயற்சிக்கிறார்கள். அத்தகைய வதந்திகள் - பொய்கள் அனைத்தும் எழுந்த வேகத்தில் அமுக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com