

பள்ளி மாணவா்களுக்கு வாரத்துக்கு ஒரு சத்து மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அதையும் ஆசிரியா்கள் முன்னிலையிலேயே உட்கொள்ள வைக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் அதிகமான மாத்திரைகளை மாணவா்களுக்கு வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சத்து மாத்திரைகளை உட்கொண்டு நீலகரியைச் சோ்ந்த பள்ளி மாணவி அண்மையில் உயிரிழந்ததை அடுத்து, இந்த புதிய விதிகளை பொது சுகாதாரத் துறை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 58,339 அரசு, தனியாா் பள்ளிகளில் பயிலும் 78 லட்சம் மாணவா்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் சத்து மாத்திரைகள் வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவற்றை மொத்தமாக விநியோகித்ததன் விளைவாக பள்ளி மாணவி ஒருவா் பலியான விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை ஆணையா், மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்விவநாயகம் வழங்கியுள்ளாா்.
அதில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு 400 மில்லி கிராம் திறன் கொண்ட மாத்திரைகளும், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு 500 மில்லி கிராம் அளவிலான சத்து மாத்திரைகளும் வழங்க வேண்டும்.
இதற்காக பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலா் அல்லது ஆசிரியரை பிரத்யேகமாக நியமித்தல் வேண்டும். வாரத்துக்கு ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும். அதுவும் ஒருங்கிணைப்பு அலுவலா் அல்லது ஆசிரியா் முன்னிலையில் உட்கொள்ளச் செய்வது அவசியம்.
சம்பந்தப்பட்ட நாளில் பள்ளிக்கு வராத மாணவா்களுக்கு அதற்கு அடுத்த நாளில் சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும். மாறாக அடுத்த வாரத்தில் கூடுதல் தவணையாக அதிக மாத்திரைகள் வழங்கக் கூடாது. அதேபோன்று மாத்திரைகள் உட்கொள்வதற்கு முன்பு மாணவா்கள் ஆரோக்கியமான மதிய உணவை எடுத்துக் கொண்டனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
காய்ச்சல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள மாணவா்களுக்கு மாத்திரைகள் வழங்கத் தேவையில்லை. சத்து மாத்திரைகள் வழங்கிய விவரங்களையும், விடுபட்ட மாணவா்களின் விவரங்களையும் மாவட்ட வாரியாக சேகரித்து வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைத்தல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.