
விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அழகிப்போட்டி இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று, சென்னையைச் சேர்ந்த கே.நிரஞ்சனா(25) மிஸ் கூவாகம் 2023-ஆக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல சென்னையைச் சேர்ந்த ஜி.டிஷா இரண்டாமிடத்தையும், சேலத்தைச் சேர்ந்த இ.சாதனா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மிஸ் கூவாகம் அழகிப் போட்டியின் முதல், இரண்டாம் சுற்றுகள் உளுந்தூர்பேட்டையிலுள்ள மண்டபத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இறுதிச் சுற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தளபதி திடலில் திங்கள்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. திங்கள்கிழமை மாலை கலை நிகழ்ச்சிகள் முடிந்து, இறுதிச்சுற்று தொடங்கும் நேரத்தில் மழை வேகமாக பெய்யத் தொடங்கிய து. திறந்தவெளி அரங்கில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், மழையால் அழகிப் போட்டியை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த விழாவில் இளைஞ ர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசிவிட்டு, சென்னை புறப்பட்டுச் சென்றார்.
மழை காரணமாக செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மிஸ் கூவாகம் இறுதிச்சுற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை கலைஞர் அறிவாலயத்தில் அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்று தொடங்கியது. உளுந்தூர்பேட்டையில் முதல், இரண்டாம் சுற்றில் பங்கேற்ற 46 பேரிலிருந்து 16 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றனர். இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற 15 பேர் பங்கேற்றனர்.
இவர்களின் நடை, உடை பாவனையின் அடிப்படையில், பெங்களூரு சுபாஷினி, சென்னை கே.நிரஞ்சனா, சேலம் இ.சாதனா, தூத்துக்குடி ரித்திகா, நவீனா, சென்னை சாம்ஸ்ரீ, ஜி.டிஷா ஆகி ய 7 பேர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களிடம் தனித்தனியே கேள்வி கேட்கப்பட்டது. திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு என் தேவை, மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டால், உங்கள் மூத்தோருக்கு என்ன செய்வீர்கள், வாழ்வில் எதை சுதந்திரமாகக் கருதுகிறீர்கள் போன்ற கேள்விகள் பல்வேறு துறை சார்ந்தவர்களால் கேட்கப்பட்டு, அவர்களின் பதில் பெறப்பட்டது.
நடை, உடை, பாவனை மற்றும் கேள்விக்கு அளித்த பதில்களின் அடிப்படையில், நடுவர்கள் திருநங்கை நடிகை மில்லா, காளி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க மேற் பார்வையாளர் பிரேமா ஆகிய மூவரும் முதல், இரண்டாம், மூன்றாமிடம் பெற்றவர்களைத் தேர்வு செய்து, விழாக் குழுவினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து 2023-ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக சென்னையைச் சேர்ந்த கே.நிர ஞ்சனா (25) தேர்வு செய்யப்பட்டார். இரண்டாமிடத்தை சென்னை ஜி.டிஷா (26), மூன்றாமிடத்தை சேலம் இ.சாதனா (25) ஆகியோர் பெற்றனர்.
இவர்களுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் பி.மோகனாம்பாள், செயலர் ஆர்.கங்கா, விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி ஆகியோர் கிரீடம் கூட்டி, பட்டம் அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அழகிப் போட்டியில் வென்றவர்களுக்கு மூத்த திருநங்கைகள் முத்தமிட்டு வாழ்த்தினர்.
விழாவில் விழுப்புரம் நகர திமுக செயலர் இரா.சக்கரை, திருநங்கைகள் தேசிய கவுன்சில் உறுப்பினர் ந.ராமமூர்த்தி, தென்னி ந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சி.நூரி, இணைச் செயலர் எஸ்.சுபிக் ஷா, பொருளாளர் வி.சோனியா, ஒருங்கிணைப்பாளர் கே.அருணா, நிர்வாகக் குழு உறுப்பினர் ஷர்மிளா, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் விமலா, குயிலி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் சுசீலா, சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.