மாணவர்களுக்கு ஏன் தண்டனை?

 தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்று வருகின்றபோதும், தேர்வுத் தாள் திருத்தும் பணியில் மட்டும் நமது பல்கலைக்கழகங்களால் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியாதது புதிராக இருந்து வருகிறது. 
மாணவர்களுக்கு ஏன் தண்டனை?

 தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்று வருகின்றபோதும், தேர்வுத் தாள் திருத்தும் பணியில் மட்டும் நமது பல்கலைக்கழகங்களால் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியாதது புதிராக இருந்து வருகிறது.
 தேர்வுத் தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியர்களின் கவனக்குறைவு, அலட்சியம் காரணமாக பல மாணவர்கள் தேர்வில் தோல்வியுறுவதும், மறுமதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது.
 தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தாள் ஒன்றுக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் ரூ.1,000 என கட்டணம் விதித்துள்ளது.
 பெரும்பாலும் தேர்வை சிறப்பாக எழுதி, அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை கொண்ட மாணவர்களே தேர்வுத் தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுஆய்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். அதே நேரம், கல்லூரி கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கே திணறும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேர்வுத் தாள் மறுமதிப்பீடு, மறுஆய்வு கட்டணங்களைச் செலுத்த முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. இவர்களிடையே தேர்வுத் தாள் மறுமதிப்பீடு குறித்த விழிப்புணர்வு இருக்குமா என்பதும் சந்தேகமே.
 இவ்வாறு தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள், சக மாணவர்கள், நண்பர்கள், சக பேராசிரியர்கள் மற்றும் பெற்றோரின் புறக்கணிப்புக்கும் உள்ளாகின்றனர். இந்த சமூகப் புறக்கணிப்பு, அல்லது அதுகுறித்த அச்சத்தால் ஏற்படும் விரக்தியின் உச்சத்தில், "தற்கொலை' என்ற முடிவை சில மாணவர்கள் எடுத்துவிடுகின்றனர்.
 இத்தனை சவால்கள், புறக்கணிப்புகளைக் கடந்து ஒரு மாணவர் தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றாலும், அதற்காக அவர் செலுத்திய கட்டணத்தை பல்கலைக்கழகங்கள் திருப்பித் தருவதில்லை. இவை அனைத்துக்கும் காரணமான தேர்வுத் தாள் திருத்திய பேராசிரியர்கள் மீது பல்கலைக்கழகங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது வேடிக்கை. இதற்கு நபர் பற்றாக்குறையை பல்கலைக்கழக அதிகாரிகள் காரணமாக கூறுகின்றனர்.
 60-ஆக மாறிய 8: இப்படித்தான், வடசென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ (இளநிலை கணினி செயல்பாடுகள்) படித்த ரோஷினி என்ற மாணவிக்கும், அவருடைய குடும்பத்துக்கும், சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த மார்ச் 21-ஆம் தேதி வெளியிட்ட பருவத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சியை அளித்தன.
 படிப்பில் சிறந்து விளங்கும் இந்த மாணவி, 6 பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற நிலையில், கணினி அமைப்பியல் (ஆர்கனைசேஷன் - எஸ்இஸட்23சி) என்ற பாடத்தில் மட்டும் வெறும் 8 மதிப்பெண் பெற்று தோல்வியுற்றார். அவர் படித்த கல்லூரி துறைத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில், தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.
 இந்த மறுமதிப்பீடு முடிவை பல்கலைக்கழகம் கடந்த 17-ஆம் தேதி வெளியிட்டது. இதில், 8 மதிப்பெண் பெற்று தோல்வியுற்ற பாடத்தில் 60 மதிப்பெண் பெற்று ரோஷினி தேர்ச்சி பெற்றார். அதுபோல, இவருடைய துறையிலிருந்து தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மேலும் 3 மாணவிகளும், அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 ஒருவேளை, விழிப்புணர்வின்மை அல்லது குடும்பச் சூழல் காரணமாக தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்காவிடில் ரோஷினி போன்ற மாணவ, மாணவிகளின் நிலை கேள்விக்குறியே.
 பலனளிக்காத முன்னெடுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவரின் தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டின்போது அதிகபட்சம் 15 சதவீதம் வரை மதிப்பெண் மாற்றம் ஏற்படலாம் என வரம்பு நிர்ணயித்துள்ளனர். அதற்கு மேல் மதிப்பெண் மாற்றம் வரும்போது, அந்தத் தேர்வுத் தாள் மூன்றாவது மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகே அந்த மாணவருக்கான மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்படுகிறது. மேலும், அந்தத் தேர்வுத் தாளை திருத்திய பேராசிரியருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. ஆனால், தண்டனை எதுவும் வழங்கப்படுவதில்லை.
 சென்னைப் பல்கலைக்கழகத்தில் இத்தகைய நடைமுறை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதும், மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழகத்தின் முந்தைய தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், தேர்வுத் தாள் திருத்தும் பேராசிரியர்களின் பொறுப்பை அதிகரிக்கும் வகையில் சில முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், பேராசிரியர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த முன்முயற்சி நடைமுறைகக்கு வராமல் போயுள்ளது.
 பேராசிரியர்கள் மட்டும் காரணமா?: மதிப்பெண்ணில் மிகப்பெரிய வித்தியாசம் வருவதற்கு அந்தத் தேர்வுத் தாளை திருத்தும் பேராசிரியரை மட்டும் முழுமையாக குற்றஞ்சுமத்திவிட முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
 பெரும்பாலான தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழக தேர்வுத் தாள் திருத்தும் பணிக்கு பேராசிரியர்களை முழுமையாக விடுவிப்பதில்லை. கல்லூரியில் அவர்களுக்கான அன்றைய வகுப்பை முடித்துவிட்டு, தேர்வுத் தாள் திருத்தும் பணிக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகின்றன.
 இதன் காரணமாக, பெரும்பாலான பேராசிரியர்கள் காலையில் தங்களின் கல்லூரிக்குச் சென்று முதல் இரண்டு மணி நேரம் தங்களுடைய பாடங்களை நடத்திவிட்டு, பிற்பகலில் பல்கலைக்கழகத் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனால் ஏற்படும் வேலைப் பளு மற்றும் மனச் சோர்வில், தேர்வுத் தாள் திருத்தும் பணியில் தவறுகள் நிகழ்வது இயல்பு என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
 தீர்வு என்ன?: தேர்வுத் தாள் திருத்தும் பணிக்காக கல்லூரிகளுக்கு அதிகபட்சம் 10 நாள்கள் விடுமுறை அறிவித்து, அதற்கான அறிவிக்கையை அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அனுப்ப வேண்டும். மேலும், தேர்வுத் தாள் திருத்தும் பணிக்கான படியை உயர்த்துவது, திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, திருத்த வேண்டிய தாளின் எண்ணிக்கையைக் குறைப்பது; மதிப்பெண் அதிக வித்தியாசம் வரும் அளவுக்கு அலட்சியமாக தேர்வுத் தாளை திருத்திய பேராசிரியரை தேர்வுத் தாள் திருத்தும் பணியிலிருந்து 3 ஆண்டுகள் தடை செய்வது; மாணவர்கள் செலுத்திய மறுமதிப்பீட்டு கட்டணத்தை, அந்த தேர்வுத் தாளை திருத்திய பேராசிரியரிடமிருந்து வசூலித்து மாணவர்களுக்கு திரும்ப அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தப் பணியை மேம்படுத்த முடியும்.
 இல்லையெனில், பேராசிரியர்கள் தவறு செய்வதும், அதற்காக மாணவர்கள் "தண்டனை'யை அனுபவிப்பதும் தொடரும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com