ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துகளைக் கேட்டு நீதிமன்றத்தில் தீபா மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜெ. தீபா மனுதாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துகளைக் கேட்டு நீதிமன்றத்தில் தீபா மனு
Updated on
2 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜெ. தீபா மனுதாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் என்றும், எனவே, கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கிலான மதிப்பு கொண்ட ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மனு தாக்கல் செய்திருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை ஏலத்தில் விட, கர்நாடக அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஏலம் விடக்கூடாது என்றும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தன்னிடம் வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு பொருந்தாமல் ரூ. 66.65 கோடி சொத்து சோ்த்த வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள விலை உயா்ந்த சேலைகள், குளிா்சாதனப் பெட்டிகள், தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், சுவா் கடிகாரங்கள், மின்விசிறிகள், இருக்கைகள், பெட்டிகள், மேஜைகள், அலங்கார மேஜைகள், தொங்கு விளக்குகள், சோபாக்கள், அலங்கார செருப்புகள், கண்ணாடிகள், அலங்காரக் கண்ணாடிகள், பணப் பெட்டகங்கள், சால்வைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், விடியோ கேமரா, சி.டி.பிளேயா், ஆடியோ டெக், டேப் ரெக்காா்டா், விடியோ கேசட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 1997ஆம் ஆண்டு முதல் சென்னை நீதிமன்றத்தில் நடந்துவந்த சொத்துக் குவிப்பு வழக்கு, 2003ஆம் ஆண்டு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அப்போது, ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெங்களூரு மாநகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. 11,344 விலை உயா்ந்த சேலைகள், 750 செருப்புகள், 250 சால்வைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கா்நாடக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டு, தண்டனைக் காலமும் முடிவடைந்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீா்ப்பு வழங்கிய நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம்விட்டு, அதில் கிடைக்கும் நிதியை குற்றவாளிகள்செலுத்த வேண்டிய அபராதத்தொகையில் சோ்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும் நிதி மீதமிருந்தால், வழக்கு விசாரணைக்கு செலவிட்ட ரூ.5 கோடியை கா்நாடக அரசுக்கு அளிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் தனது இறுதித் தீா்ப்பில் கூறியிருந்தது.

அதன்படிபறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடுவதற்கு சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிப்பது தொடா்பாக கா்நாடக அரசுக்கு விசாரணை நீதிமன்றம் கடிதம் எழுதி, சிறப்பு அரசு வழக்குரைஞரும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக கா்நாடக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள சேலைகள், செருப்புகள், சால்வைகள் உள்ளிட்ட 27 வகையான பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஏலம் விடக் கூடாது என்றும் ஜெ. தீபா மனுதாக்கல் செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com