பெண்களை உயர்த்தும் திட்டங்கள்!

திமுக அரசு பெண்களுக்காக குறிப்பிடத்தக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருவது ஒட்டுமொத்த மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 
பெண்களை உயர்த்தும் திட்டங்கள்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் தமிழ்நாடு முதல்வராக மே 7 ஆம் தேதி முதல்முறையாக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின். பதவியேற்றவுடனேயே(#2YrsOfDravidianModel) பெண்களுக்கான இலவசப் பேருந்து உள்பட 5 முக்கியத் திட்டங்களில் கையெழுத்திட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றார். 

தொடர்ந்தும் பல்வேறு துறை ரீதியாக முக்கிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வரும் திமுக அரசு, பெண்களுக்காக குறிப்பிடத்தக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருவது ஒட்டுமொத்த மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்படும் என்றும் இந்த சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சமநிலையை விரைவில் அடைவர் என்றும் முதல்வர் ஸ்டாலின் பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 

பெண்களுக்காக திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன? 

இலவசப் பேருந்து பயணம்

திமுக அரசு பதவியேற்றதுமே கொண்டுவரப்பட்ட முக்கியான திட்டம், பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகம் பேசப்படும் திட்டம். குறிப்பிட்ட தூரம் அல்லது நகரங்களுக்குள் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கிறார்கள். இது பெரிதும் உதவியாக இருப்பதாக வேலைக்குச் செல்லும் மகளிர் பலரும் கூறி வருகின்றனர். 

இலவசப் பேருந்து திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் பயன்பெற்றுள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்வதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

மகளிர் உரிமைத் தொகை 

எந்த எதிர்பார்ப்புமின்றி வீட்டில் உழைக்கும் மகளிருக்காக 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் நடப்பு(2023-24) நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற உள்ளனர்.

புதுமைப்பெண் திட்டம் 

பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் 'புதுமைப்பெண் திட்டம்' திமுக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்பச் சூழல், வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவிகளுக்கு இது உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

முதற்கட்டமாக இத்திட்டத்தால் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருவதாகவும் இரண்டாம் கட்ட திட்டத்தில் 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. 

மகளிர் சுய உதவிக்குழு கடன் 

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு புதியதாக ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு தொழில் தொடங்க அரசால் கடனும் வழங்கப்பட்டு வருகிறது. 

2022 - 23ஆம் நிதி ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 25,219 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்பட்டு இதன் மூலம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 349 சுய உதவி குழுக்கள் பயனடைந்துள்ளன. 2023 - 24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 7.22 லட்சம் மகளிர் குழுக்கள் உள்ளன. 

மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையில், 31.03.2021 நிலவரப்படி நிலுவையில் இருக்கும் ரூ.2,756 கோடி கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கை(2021-22)யில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முதல் பெண் அர்ச்சகர் 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை 1970ல் கருணாநிதி முன்னெடுத்தார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நிறைவேற்றியுள்ளார். மேலும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்து முதல் பெண் அர்ச்சகராக சுஹாஞ்சனா என்பவர் நியமிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக பணியாற்றி வருகிறார். 

பேறுகால விடுப்பு 

தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரில் பதிவு செய்யப்பட்டதுபோல, இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகளும் இனி குடும்பத் தலைவிகள் பெயரிலேயே பதிவு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

பெண் காவலர்களுக்கு விலக்கு 

பெண் காவலர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க சிரமம் என்பதால் சாலைப் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இது பெண் காவலர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. 

அரசுப்பணியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடான 30 சதவிகிதம், 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 

அதுபோல, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

மகளிர் காவல்நிலையம் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

அரசு மகளிர் விடுதி

தமிழ்நாடு அரசு சார்பில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அரசு மகளிர் விடுதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் திமுக அரசு அறிவித்துள்ளது. 

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக தற்காப்புக்கலை பயிற்சி வழங்குவது எனப் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தவுள்ளது. 

[வணிகப் பெருக்கச் செய்தி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com