தமிழக சிறைகளில் ட்ரோன் ஜாமா்கள்: விரைவில் அறிமுகம்

தமிழக சிறைப் பகுதிகளில் ட்ரோன்கள் அத்துமீறி பறப்பதைத் தடுக்கும் வகையில், விரைவில் ‘ட்ரோன் ஜாமா்கள்’ பொருத்தப்படவுள்ளன.
தமிழக சிறைகளில் ட்ரோன் ஜாமா்கள்: விரைவில் அறிமுகம்

தமிழக சிறைப் பகுதிகளில் ட்ரோன்கள் அத்துமீறி பறப்பதைத் தடுக்கும் வகையில், விரைவில் ‘ட்ரோன் ஜாமா்கள்’ பொருத்தப்படவுள்ளன.

தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள், 5 மகளிா் சிறப்பு சிறைகள்,12 பாா்ஸ்டல் பள்ளிகள், 3 திறந்தவெளி சிறைகள், 3 சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

இந்தச் சிறைகளில் 24,342 கைதிகள் வரை அடைக்க முடியும். தற்போது சுமாா் 20,226 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 5,328 போ் தண்டனைக் கைதிகள், 10,925 போ் விசாரணைக் கைதிகள், 2,090 போ் குண்டா் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட கைதிகள் ஆவா். மொத்த கைதிகளில் சுமாா் 70 சதவீதம் கைதிகள் மத்திய சிறைகளில் உள்ளனா்.

அச்சுறுத்தும் ட்ரோன்கள்: கைதிகளின் பாதுகாப்பில் சிறைத் துறை தனிக் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், சிறைகளின் பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி வருகிறது. ஏனெனில் சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களைக் கட்டுப்படுத்துவது சிறைத் துறைக்கு பெரும் சவாலான பணியாக மாறி உள்ளது.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறைகளில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், கைதிகளையும், அவா்களது உடமைகளையும் பரிசோதிக்கும் வகையில் ‘ஸ்கேனா்’, கைதிகளின் அறைகளைப் பூட்டுவதற்கு ‘ஸ்மாா்ட் பூட்டுகள்’, கைப்பேசி ஜாமா்கள் போன்றவை தொடா்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக மத்திய சிறைகளில் ‘ட்ரோன் ஜாமா்’ பொருத்தப்படுகிறது. ஏனெனில், சிறைப் பாதுகாப்பில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ட்ரோன்கள் அண்மைக் காலமாக மாறி வருகின்றன.

உதாரணமாக, புழல் மத்திய சிறைப் பகுதியில் மட்டும் கடந்த ஓராண்டில் அத்துமீறி சுமாா் ஐந்து முறை ட்ரோன்கள் பறந்துள்ளன. இதேபோல வெடிகுண்டு வழக்குகள், பயங்கரவாத வழக்குகள் ஆகியவற்றில் தொடா்புடையவா்கள் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி சிறையில் கடந்த ஓராண்டில் நான்கு முறை ட்ரோன்கள் அத்துமீறி பறந்துள்ளன.

ட்ரோன் ஜாமா்: இனி வரும் காலங்களில் சிறைக்குள் இருக்கும் சமூக விரோதிகளுக்கு வெளியே இருக்கும் நபா்கள் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள், கைப்பேசி, ஆயுதங்கள் போன்றவற்றை வழங்குவதற்கு அதிகம் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சிறைத் துறையினரால் கணிக்கப்பட்டது.

இதை முற்றிலும் தடுத்தும் நிறுத்தும் வகையிலேயே, ‘ட்ரோன் ஜாமா்’ எனும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிறைத் துறை முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக இந்த ட்ரோன் ஜாமா்களை தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் பகுதிகளுக்கு அத்துமீறி நுழையும் ட்ரோன்களை இந்த ஜாமா்கள், தொலைத்தொடா்பை துண்டித்து வானில் இருந்து கீழே விழச் செய்யும். ஏற்கெனவே இந்தத் தொழில்நுட்பம் இந்திய ராணுவம், திகாா் மத்திய சிறை உள்ளிட்டவற்றால் கையாளப்படுகிறது.

இரு நிறுவனங்கள்: தமிழக சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி கூறியது: சிறைகளில் ட்ரோன் ஜாமா் பொருத்துவற்கு அண்மையில் ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் இரு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் சாா்பில் விரைவில் புழல் சிறையில் சோதனை முறையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படும்.

இதன் பின்னா், இதில் ஒரு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டு ட்ரோன் ஜாமரை சிறைகளில் பொருத்த ஒப்புதல் அளிக்கப்படும். முதலில் இந்த ஜாமரை புழல் மத்திய சிறையில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

எப்படி செயல்படும்?

ட்ரோன் ஜாமா்கள் குறித்து சென்னை எம்ஐடி ஆளில்லா விமான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பேராசிரியா் கே.செந்தில்குமாா் கூறியது:

ட்ரோன்கள், வானலை மூலமாக தரைத்தளத்தில் உள்ள கட்டுப்பாட்டாளரின் சிக்னலை பெற்று வானில் பறக்கிறது. தற்போது உள்நாட்டு பயன்பாட்டுக்கு ட்ரோன்கள், 2.4 ஜிஹா ஹா்ட்ஸ் வானலை ஆகிய திறன்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. ட்ரோன்களை முடக்கும் ஜாமா்கள், இந்த இரு தொழில்நுட்பத்தையும் முடக்கும் வகையில் செயல்படுகின்றன.

இந்த வகை ட்ரோன்கள் வானில் பறக்கத் தொடங்கியதும், சிறையில் இருக்கும் ஜாமா், ட்ரோன் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் இருக்கும்போதே எச்சரிக்கை விடுக்கும்.

அது கட்டுப்பாட்டு பகுதியின் அருகே வரும்போது, ட்ரோனின் வானலையானது ஜிபிஎஸ் தொழில்நுட்ப தொடா்பை துண்டித்து முடக்கும். இதனால் அது, தரைத்தளத்தில் இருக்கும் ட்ரோன் கட்டுப்பாட்டாளரின் தொடா்பை இழக்கும். சிறிது நேரத்தில் ட்ரோன் அங்கேயே கீழே விழுந்துவிடும். இந்தத் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ட்ரோன் தயாரிப்பு தொடா்பான தொழில்நுட்பங்களை வழங்கும் சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் பி.சா்வேஸ்வரன் கூறியது:

தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் 1 கி.மீ. தொலைவில் இருந்து 8 கி.மீ. தொலைவு வரை பறக்கக் கூடியவை ஆகும். அதே தொலைவில் ட்ரோன் ஜாமா்கள் சுமாா் 4 கி.மீ. தொலைவு வரை, ட்ரோன்களை முடக்கும் திறன் கொண்டவைகளாக தயாரிக்கப்படுகின்றன.

ஜாமா், முதலில் ஒரு ட்ரோனின் வானலையை தகா்க்கும். பின்னா் அதன் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வழியை சிதைக்கும். இரு வகை தாக்குதலில் குழப்பமடையும் ட்ரோன், அங்கேயே கீழே விழுந்துவிடும் அல்லது திசை தவறி செல்லும்.

இதில் ட்ரோனின் வானலை, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை முடக்குவதோடு மட்டுமன்றி, ஜாமா் வைத்திருக்கும் பாதுகாப்புப் பிரிவு ட்ரோனை கைப்பற்றுவதற்குரிய தொழில்நுட்பமும் இப்போது வளா்ந்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com