வன்னியர் உள் ஒதுக்கீடு 10.50 சதவீதம் எப்போது வரும்? - முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வன்னியர் உள் ஒதுக்கீடு 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்கள்  எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது; உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டியது என்பதை கடந்த மே 8-ஆம் நாள் வெளியிடப்பட்ட 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மெய்ப்பித்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களை பட்டியலிட்டால், அவற்றில் கடைசி 15 இடங்களைப் பிடித்த இராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றைத் தவிர மீதமுள்ள  12 மாவட்டங்களும் வடக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவை ஆகும்.

இதில், அனைத்து வட மாவட்டங்களுமே கடைசி 15 இடங்களில் தான் வந்திருக்கின்றன என்பது தான்;  முதல் 20 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் ஒன்று கூட வட மாவட்டங்கள் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் சராசரி தேர்ச்சி 94.05 விழுக்காடு ஆகும். வடக்கு மாவட்டங்களில் ஒன்று கூட இந்த சராசரியை எட்டவில்லை.

பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள்  கடைசி இடத்தை பிடிப்பது இப்போது தான் நடக்கும் நிகழ்வு அல்ல. 10 மற்றும் 12-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வுகள் 1980-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கடந்த 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்து வருகின்றன.

தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடித்ததற்கு காரணம், அம்மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களும்  இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையும் விட முதன்மையான காரணம் வட மாவட்ட மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியர்களும், பட்டியல் சமுதாயத்தினரும் தான். 

வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர் சமுதாய மக்களால் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில் தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை. மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மாணவர்களால் காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்; அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது.

வன்னிய சமுதாயத்தின் பின்தங்கிய நிலை தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை பின்னுக்கு இழுக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, சமூகமேம்பாடு ஆகியவற்றின் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால், அதற்கு வன்னியர்களின் கல்வி, சமூகநிலை மேம்பட வேண்டும்; அதற்கு மிகவும் விரைவாக வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.  மே 7 ஆம் நாள் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 7 ஆம் நாள் வாக்கில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையும் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியாகக் கூடும். அதற்கு இன்னும் மிகக்குறைந்த காலமே உள்ளது.

கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசின் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படாத நிலையில் நடப்பாண்டிலாவது இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வன்னிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு 10.50% இட ஒதுக்கீடு எப்போது வரும்? என்று வினவுகின்றனர்.  

எனவே, தமிழ்நாடு அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றவோ அல்லது அவசர சட்டமாக பிறப்பிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன்மூலம் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com