ஹுண்டாய் நிறுவனம் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படும்: ஸ்டாலின்

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஹுண்டாய் நிறுவனம் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படும்: ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

ஹுண்டாய் நிறுவனம், இருங்காட்டுக்கோட்டையில் தற்போதுள்ள தொழிற்சாலையினை, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில்,  1996ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஹூண்டாய் நிறுவனத்தினுடைய முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார்கள். 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையும் துவங்கப்பட்டது.

இதே ஹூண்டாய் நிறுவனத்தினுடைய ஒரு கோடியாவது காரை 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொழிற்சாலையில் இருந்து நான் அறிமுகம் செய்து வைத்ததை இந்த நேரத்தில் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்கும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக இந்த நிறுவனத்தினுடைய மொத்த முதலீடு சுமார் 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது.

ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, மின்னூர்திகள் (Electrical vehicles) தயாரிப்பில் தற்போது தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது உள்ளபடியே பாராட்டுக்குரிய. இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள திறன் வாய்ந்த மனித வளம், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றுடன், தமிழ்நாடு அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023 வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக, ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவிற்கும், பிற உலக நாடுகளுக்கும், மின்னூர்தி தயாரித்தலுக்கான தனது நெடுங்கால முதலீட்டுத் திட்டத்திற்கு, முதன்மை தளமாக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது.

ஹுண்டாய் நிறுவனம், இருங்காட்டுக்கோட்டையில் தற்போதுள்ள தொழிற்சாலையினை, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இந்நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிலைக்கத்தக்க தயாரிப்பினை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு, 15 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாண்புமிகு தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த, ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த நம்முடைய தங்கம் தென்னரசு அவர்களும், அவருக்கு உதவியாக இருந்த தொழில் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  ச.கிருஷ்ணன், தொழில்துறை அதிகாரிகளும், இந்திய அளவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளுக்கும் சென்று முன்னணி தொழில் துறையினரை சந்தித்து பெரும் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளனர். அதற்காக, நான் அவர்களை இந்த நேரத்தில் மனதார பாராட்ட விரும்புகிறேன்.

மேலும், இன்றைய தினம், தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா, மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஹூண்டாய் நிறுவனம், தற்போது 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறது.  இந்த முதலீடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது இலட்சிய இலக்கினை அடைவதற்கு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com