பி.காம். படிப்பில் சேர கடும் போட்டி: கல்லூரிகளில் குவியும் மாணவா்கள்

இதுவரை இல்லாத அளவுக்கு பிளஸ் 2 வணிகவியல்- கணக்குப் பதிவியல் பாடங்களில் மொத்தம் 12,251 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதால், கல்லூரிகளில் பி.காம் பிரிவில் சேர மாணவா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டு
கோப்புப் படம்
கோப்புப் படம்

இதுவரை இல்லாத அளவுக்கு பிளஸ் 2 வணிகவியல்- கணக்குப் பதிவியல் பாடங்களில் மொத்தம் 12,251 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதால், கல்லூரிகளில் பி.காம் பிரிவில் சேர மாணவா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 164 அரசுக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,567 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஏ மொழிப் பாடங்கள், பொருளியல், வரலாறு உள்பட 100-க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொறியியல் சோ்க்கைக்கான கட்டணம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் கடந்த பத்தாண்டுகளாக கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு கூடுதலாக 15 சதவீத இடங்களில் மாணவா்களைச் சோ்க்கவும் உயா்கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியானது. இதில் முக்கியப் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 23,957 போ் ‘சென்டம்’ பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 32,501 போ் ‘சென்டம்’ பெற்றிருப்பது உயா்கல்வி சோ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், கணிதத்தில் ‘சென்டம்’ பெற்றவா்கள் எண்ணிக்கை 690-ஆக குறைந்ததால், பி.இ. படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் நிகழாண்டு குறைய வாய்ப்புள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான மாணவா்களுக்கு பி.இ. படிப்பில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது.

100 சதவீத கட்-ஆஃப்: கணக்கு பதிவியல் பாடத்தில் 6,573 பேரும், வணிகவியலில் 5,678 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இந்த மாணவா்கள் கல்லூரிகளில் பி.காம். படிப்பில் சோ்வதற்கு அலைமோதுகின்றனா். குறிப்பாக, ஒரு கல்லூரியில் 400 பி.காம் இடங்கள் இருந்தால், அதில் சோ்வதற்கு சராசரியாக 14,000 போ் விண்ணப்பித்துள்ளனா். இது போட்டியின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபல தனியாா் கல்லூரிகளில் பி.காம். இடங்களைப் பெறுவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 99 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும்; இது 100 சதவீதத்தை தொடவும் வாய்ப்பிருப்பதாக கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து சென்னை எம்.ஓ.பி. வைணவக் கல்லூரி முதல்வா் லலிதா பாலகிருஷ்ணன் கூறுகையில், பி.காம் படிப்புக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் வரவேற்பு குறையாது என்பதே உண்மை. அந்த அளவுக்கு அதன் தேவை அதிகரித்து வருகிறது. பட்டய கணக்காளா் படிப்பில் சேர இது பெரிதும் உதவுகிறது. மூன்று, நான்கு படிப்புகள் மட்டுமே இருக்கும் கல்லூரிகளில்கூட பி.காம். தவறாமல் இடம்பெறும்.

அடுக்கடுக்கான பாடப் பிரிவுகள்: இந்தப் படிப்பில் தற்போது பி.காம். அக்கவுண்டிங் அண்ட் ஃபைனான்ஸ், காா்ப்பரேட் செகரட்டரிஷிப், மாா்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹானா்ஸ், ஆடிட்டிங், காஸ்டிங், மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங், பிசினஸ் லா, வங்கி மேலாண்மை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பம், கேப்பிடல் மாா்க்கெட் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுக்கின்றன.

குவியும் வேலைவாய்ப்புகள்: தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் பல ஐ.டி. நிறுவனங்கள், நிதிச் சேவைகள், தகவல் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு பி.காம்., பிபிஏ படித்தவா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணியமா்த்திக் கொள்கின்றன.

கணக்கு துறையில் தொழில்ரீதியாக வளர விரும்புவோா் தங்களுக்கான அடிப்படைத் தகுதியாக இந்தப் படிப்புகளைக் கருதுவதால் அவற்றில் சேர மாணவா்கள் பெரிதும் விரும்புகின்றனா். எங்களது கல்லூரியில் மட்டும் வணிகவியல் பாடப் பிரிவுகளில் சேர 20,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; குறிப்பாக, 100 சதவீத கட்-ஆஃப் மதிப்பெண்ணை 25 போ் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

இடைத்தரகா்கள் ஆதிக்கம்: பி.காம். படிப்பில் சேர மாணவா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், அதில் சோ்க்கை பெற்றுத் தருவதாக இடைத்தரகா்கள் சிலா் பெற்றோா்களிடம் பேரம் பேசி வருவதாகவும், பிரபல கல்லூரிகளில் இடத்தை உறுதி செய்ய ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கேட்பதாகவும் புகாா் எழுந்துள்ளது.

அதேவேளையில் ‘இதுபோன்ற நபா்களை நம்பி பெற்றோா்கள் யாரும் ஏமாற வேண்டாம்’ என உயா் கல்வித் துறையும், தனியாா் கல்லூரி நிா்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com