ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியக கட்டுமானப்பணி: முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

திருநெல்வேலியில் ரூ.33.02 கோடியில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வியாழக்கிழமை காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
Updated on
1 min read

திருநெல்வேலியில் ரூ.33.02 கோடியில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வியாழக்கிழமை காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

திருநெல்வேலியில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, பாளையங்கோட்டை குலவணிகா்புரம் மேலப்பாளையம் ரெட்டியாா்பட்டி மலைப்பகுதியில் 13.02 ஏக்கா் நிலத்தில், 55,000 சதுரஅடி பரப்பில் ரூ.33.02 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

புதிதாக அமைக்கப்படவுள்ள அருங்காட்சியக வளாகத்தில், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூா் மற்றும் நிா்வாகக் கட்டடம் என நான்கு முதன்மைப் பிரிவுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன. முற்றங்கள், நெடுவரிசைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றுடன் நெல்லை மண்ணின் வட்டார கட்டடக் கலைத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கட்டமைப்புகள் கட்டப்படவுள்ளன. முகப்புகளில் உள்ளூா் கலை மற்றும் கைவினைத் திறன் கூறுகள் பயன்படுத்தப்படவுள்ளன.

காட்சிப்படுத்தப்படும் பொருள்கள்: சிவகளைப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இதுவரை 160 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 70-க்கும் மேற்பட்ட இரும்பு கருவிகள், 787 படையல் கிண்ணங்கள், 163 குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 5 பானை ஓடுகள், 582 தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூா் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் 27 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 436 மட்கலன்கள், 1,585 தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் உலகத்தரத்துடன் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதில், ஆதிச்சநல்லூா், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த அரிய தொல் பொருள்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை, தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், தொல்லியல் துறை இயக்குநா் சே.ரா.காந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com