கமல் ஹாசன்
கமல் ஹாசன்

நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசன் முடிவு! ஆனால்...

நாட்டின் நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
Published on

நாட்டின் நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்த நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் நாட்டின் நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிய நாடாளுமன்றத் திறப்பு அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய பெருமைமிகு தருணம். இந்த வரலாற்று தருணத்துக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆனால் இந்த தருணம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது. 

பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும். அவர் ஏன் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கு எந்த காரணங்களும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அது சட்டவடிவு பெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தவும் ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர். 

அதனால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை பிரதமர் அழைக்க வேண்டும். அதுபோல இவ்விழாவில் கலந்துகொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com