2026ல் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை வாழும் வித்தையை சொல்வேன்: சரத்குமார் பேச்சு

2026 இல் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை வாழ்வதற்கான வித்தையை சொல்வேன் என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார். 
2026ல் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை வாழும் வித்தையை சொல்வேன்: சரத்குமார் பேச்சு


மதுரை: 2026 இல் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை வாழ்வதற்கான வித்தையை சொல்வேன் என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார். 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் சுற்றுசாலை பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, தீர்மான விளக்க கூட்டத்தின் வாயிலாக உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, 2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது தெரிய வரும்.  

மது உடல் ஆற்றலை இழக்க செய்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பல வகையாக உருவெடுத்து உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் செயலும் நடைபெற்று வருகிறது.

ஆனால், 2025 இல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும் என்பதனை அடுத்து இளைஞர்களின் மூளையை மழுங்கடிப்பதில் வெளிநாடுகளின் சதி உள்ளது. போதை பொருள்களால் இளைஞர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

எனக்கு 69 வயது ஆகிறது. ஆனால் 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன்  இருப்பேன். அதற்கான வித்தையை கற்று உள்ளேன், அதனை 2026 ஆம் ஆண்டு என்னை முதல்வராக்கினால், அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன். 

தற்போது நமது கூட்டத்திலேயே போதையில் வந்து தள்ளாடியபடி பேசி வருகிறார்கள், அவர்களை திருத்து வகையில் அவர்களுடன் பேச வேண்டும் என்று விருப்பம்தான் ஆனால் நிலைமை சரியில்லை.

தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும்.  தானாகவே மதுக்கடைகள் மூடப்பட்டுவிடும்.

பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதை நானே பார்த்துள்ளேன், அவர்களை கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழவேண்டும் என்பதற்காக கூடங்குளம் வேண்டி உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்தேன், அதன்படி தற்போது பொருளாதாரம் முன்னோக்கி வருகிறது.

போதை பொருள்கள் பல்வேறு விதங்களாக இந்தியாவில் ஊடுருவி வருகின்றது. மதுபான கடைகளுக்கு சென்று மதுபானங்கள் வாங்காமல் இருந்தாலும் கூட மதுவிலக்கை கொண்டு வரலாம். 

தமிழகத்தின் கல்வி இந்திய அளவில்  சிறந்ததாக திகழும் சூழலில், அறிவார்ந்த இளைஞர்கள் இருந்தும் போதைக்கு அடிமையாக இருப்பதால் தமிழ்நாடு தள்ளாடுகிறது. 

ரூ.40,000 கோடி வருவாய்க்காக மதுவை அரசு விற்கக் கூடாது. மதுபான வருவாய்க்கு மாற்றாக பிற வருவாய் என்ன கிடைக்கும் என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

"சமூக குடிப்பழக்கம்" என்கிற பெயரில் பணியிடங்களில் மேலை நாட்டு கலாசாரங்களை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். மாலை வேலைக்கு பிறகு வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் சோதனை செய்யுங்கள். அதில் தவறு இல்லை.

மது இல்லாத மாநிலங்கள் இந்தியாவில் உள்ளது, அம்மாநிலங்களில் கொலை, கொள்ளை, கலவரம், சாலை விபத்துகள் போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் மது விலக்கை அமுல்படுத்த முன்வரவேண்டும்.

பூரண மதுவிலக்கிற்காக சமத்துவ மக்கள் கட்சி இறுதி வரை போராடும். சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். 

அதன், முதல் நோக்கமாக மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம் என்று சரத்குமார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com