
சேலம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
தினமணி மற்றும் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஸ்ரீ சரவண பவன் குரூப் மற்றும் ஸ்பார்டா சார்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
கோடை வெயிலில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் வழங்கும் வகையில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சி கடந்த 2018 முதல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் ஆட்சியர் அலுவலகம் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பா.விஜயகுமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை வழங்கினார்.
சேலம் நகரப் பகுதியில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பி.லாவண்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர்கள் வெங்கடேசன் (சேலம் நகரம்), உதயகுமார் (போக்குவரத்து), சேலம் நகர ஆய்வாளர் மோகன்பாபு கண்ணா, உதவி ஆய்வாளர் பழனிசாமி (போக்குவரத்து), விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையர் மருத்துவர் பி.செந்தில்குமார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை மற்றும் தருமபுரி பதிப்புகளின் முதன்மை மேலாளர் க.தியாகராஜன், தருமபுரி பதிப்பு வர்த்தகப் பிரிவு துணை மேலாளர் பா.பிரதீஷ், விற்பனை பிரிவு உதவி மேலாளர் வி.எஸ்.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.